இனிய இஸ்லாமே நம் உயிர் மூச்சு
April 22nd, 2005 by Ahmad Baqavi
இஸ்லாம் நடைமுறைக்கேற்ற நெறி
இஸ்லாம் தோன்றியது முதல் துலங்கிடும் இன்று வரை அதை பின்பற்றுவோர் நாளுக்கு நாள் பல்கிப்பெருகி வருகின்றனர். அதன் ஏகத்துவக் கொள்கை, வணக்க வழிபாடுகள், வாழ்கை நெறிகள், கல்வி, கலாச்சாரம், அரசியல் சமூக கோட்பாடுகள் அனைத்தும் மனிதன் அன்றாடம் பின்பற்றியொழுகும் முறையில் அமைந்துள்ளதே காரணமாகும்.
எனவே அதனைப் பின்பற்றியோர் உயர்ந்தோங்கி இஸ்லாத்தை உயிரினும் மேலாக மதித்து உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசித்தனர். பிரகாசித்துக்கொண்டிருக்கின்றனர்.
அதனை பின்பற்றும் முஸ்லிம்கள்,
கொள்கையிலே உறுதி மிக்கவர்கள்!
வழிபாடுகளில் இறைநெறி நிற்பவர்கள்!
வாழ்கை நெறிகளில் தூய்மையானவர்கள்!
பேச்சில் வாய்மையானவர்கள்!
செயலில் கண்ணியமானவர்கள்!
வாக்குறுதியில் மீறாதவர்கள்!
வாணிபத்தில் நாணயமானவர்கள்!
அறிவாற்றலில் ஒப்பாரில்லாதவர்கள!
விவேகத்தில் உச்சியிலிருப்பவர்கள்!
வீரத்தில் வேங்கையைப் போன்றவர்கள்!
சாதனை படைப்பதில் சளைக்காதவர்கள்!
என உலகோரால் வியந்து பாராட்டப்பட்டனர்,
எனவே தான் அவர்கள், நனி சிறந்த நாகரித்திலும், மிக உயர்ந்த பண்பாட்டிலும், அறிவியல், விண்கலை, நுண்கலை, தத்துவம், மருத்துவம், பௌதீகம், இரசாயனம் போன்ற அனைத்துத் துறைகளிலும் உலகின் உச்சியிலே வானளாவ நின்றனர்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் :-
அல்லாஹ்:
“அவனே மனிதனைப் படைத்து வளர்த்துக் காத்து அருள் புரியும் ஒரே கடவுள் ! ”
அல்-குர்ஆன்:
“வாழ்வின் அனைத்துத் துறைக்கும் ஒரே வழிகாட்டி! ”
முஹம்மதுநபி:
“மனித குலம் முழுவதும் எல்லாக் காலத்துக்கும் பின்பற்றப்படவேண்டிய ஒப்பற்ற ஒரே தலைவர். ”
என்ற கொள்கையில் உறுதியாக நின்று, ஒரே இறைவனை ஏற்று அவனை உள்ளும் புறமும் அஞ்சி, குர்ஆனை வாழ்வின் வழிகாட்டியாகக் கொண்டு, அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வாழ்க்கை நெறிகளை வழுவாது பின்பற்றி வாழ்ந்து வந்ததேயாகும்.
ஆனால், இன்றோ “அனைத்து பாவங்களுக்கும் குற்றவியல்களுக்கும், போலி வாழ்வுக்கும் உதாரணமாக விளங்குபவர்கள்” என மற்றவர்கள் தூற்றுகின்ற அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். அந்தோ பரிதாபம்!
நாம் இவற்றைச் சிந்தித்து மீண்டும் நமது பழைய நிலையை அடைய புனித இஸ்லாத்தைப் பேணி அதனை உயிரினும் மேலாக மதித்து,
“நாங்கள் தான் உண்மை முஸ்லிம்கள்! இறைவனுக்கும், இறை தூதருக்கும்
உவப்பானவர்கள்!! இஸ்லாத்தைப்பின்பற்றுவதில் உயிரோட்டமுள்ளவர்கள்!!! ”
என உலகுக்கு எண்பிப்போமாக ! உலக அரங்கில் பறை சாற்றுவோமாக !
Leave a Reply
You must be logged in to post a comment.