உள்ஹிய்யாவின் விதிகள்
November 20th, 2009 by Ahmad Baqavi
உள்ஹிய்யா (மிருகபலி)
உள்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி
உள்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
1. ஆடு, மாடு ,ஒட்டகம் போன்ற பிராணிகளாகும் (புகாரி)
2. ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமானதாகும் – (திர்மிதி)
3. மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்காக இணைந்து வழங்கலாம் – (திர்மிதி)
குறையுள்ள பிராணிகள் கூடாது
4. உள்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
1. கண்குருடு
2. நோயவாய்பட்டவை
3. மிகவும் மெலிந்தவை
4. நொண்டியானவை
5. அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பானி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் – புகாரி, முஸ்லிம்)
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
அறுப்பதில் கூட ஒரு ஒழுங்கு முறையைப் பேணவேண்டுமென இஸலாம் கட்டளையிடுகிறது. இதில் மற்ற மதங்களைவிட இஸலாம் வேறுபடுகிறது. உயிர்பிராணிகளின் மீது கருணை காட்டவேண்டுமென வலியுறுத்துகிறது.
1. கூரிய கத்தியால் அறுக்கவேண்டும்.
2. அடித்துக் கொல்லவொ, கழுத்தை நெரித்துக் கொல்லவோ,வெட்டிச் சாய்க்கவோ கூடாது. 3. ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
4. ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கூரிய கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
5. அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள். அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்)
உள்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். (ஆதாரம்:- முஸ்லிம்)
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மட்டும்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.
Leave a Reply
You must be logged in to post a comment.