முஹர்ரம் மாதம்
December 30th, 2009 by Ahmad Baqavi
“முஹர்ர்ரம்”
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர்.முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.
“சொற் பொருள்”
முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் “தக்பீர் தஹ்ரீம்” என்றும் , உம்ரா,ஹஜ்ஜ’க்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் “இஹ்ராம்” என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை- விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் “ஹரம்”-புனித எல்லை- என்றும்,”மஸ்ஜிதுல்ஹராம்”- புனிதமான பள்ளி வாசல்- என்றும் சொல்லப்படுகிறது.)
“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.
இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.
ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்.
குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட “முஹர்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.
இந்த மாதத்தில் தான் “ஆஷூரா” என்னும் நாள் வருகிறது. இந்த ‘ஆஷூரா’ என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது “பத்தாவது நாள்” என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் “திஷ்ரி” மாதமும் அரபிகளின் “முஹர்ரம்” மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.
யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட மூஸா (அலை) அவர்கள் , ” அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.
அது மட்டுமன்றி “வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்றும் கூறினார்கள். { ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
ஆஷூரா நாளின் பெயரால் கற்பனைக் கதைகள்.
இந்நாளை புண்ணியம் பொழியும் புனித நாளாளக் கருதி பல்வேறு செயல்களிலும்,சம்பிரதாயங்களிலும், கொண்டாட்டங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபடுவது வேதனைக்குரியதாகும். அன்று தான் “நற்செயல்கள் செய்வதற்குரிய நாள்” என்றும் “குளிப்பதற்கும் சுர்மா இடுவதற்கு ஏற்ற நாள்” என்றும் கருதுகின்றனர்.
ஏழைகளுக்கு தர்மம் செய்வதும், நகம் வெட்டுவதும், அனாதைகளின் தலையை வருடி விடுவதும், மார்க்க அறிஞர்களை சென்று காண்பதும், நஃபில் என்னும் அதிகப்படியான தொழுகைகளைத் தொழுவதும்,”குல்ஹ’வல்லாஹ் சூராவை ஆயிரம் முறை ஓதுவது முஸ்தஹப்” என்றும் நம்புகின்றனர். அது மட்டுமல்ல “அந்நாளில் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் இறைவன் அவ்வாண்டு முழுவதும் அவருக்கு இரணம் அளிப்பான் என்றும், “இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்” என்று சுப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறியிருக்கிறார்கள் என்றும் பிரச்சாரங்கள் செய்கின்றனர்.
இந்நாளுக்கு மாண்புகள் வர பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்:-
நபி நூஹ் (அலை) தூபான் பெருவெள்ளம் தணிய கப்பலிலிருந்து கீழே இறங்கியபோது கையில் உணவு ஏதும் இல்லாததால் தம் புனிதக்கையால் மண்ணை அள்ளினர். அள்ளிய மண் அனைத்தும் அக்கணமே மணிக்கோதுமையாக மாறியது. தம் கையிலிருந்ததை விதைத்தனர். மறுகணம் அவை வளர்ந்து பலன் வழங்கத்துவங்கின.அவர்களுடன் இறங்கிய மக்களிடம் இருந்த ஏழுவகை பயறுகளை வேகவைத்த போது அவை போதிய உணவாக மாறியது. மகப் பேறற்றிருந்த தம் புதல்வியன் வயிற்றில் தடவியபோது அவர் கருவுற்றார். இத்தனையும் நடைபெற்றது இந்த ஆஷூரா நாளில் தான். எனவே இந்நாளில் நன்றாக உணவு சமைத்து குடும்பத்தினர் அனைவரும் உண்டால் அது அபிவிருத்திக்கு வழி வகுக்கும் என்றும் கூறுகின்றனர்.
“இந்நாளிற்கு நீண்ட பாரம்பரியப் பெருமை இருக்கிறது” என்றும் கூறுகின்றனர்.
1. ” குன்” என்னும் ஒரே சொல்லில் விண்ணையும் மண்ணையும் படைத்தது இந்நாளில் தான். (அல்லாஹ் வானத்தையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் என்று திருக்குர்ஆன்(50:38) கூறும்போது ஒரே நாளில் படைத்தான் எனக்கூறுவது குர்ஆனுக்கு முரண்படுகிறது.)
2.ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களைப்படைத்ததும் இந்நாளில் தான். (ஆனால்ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது வெள்ளிக்கிழமை என்று ஆதாரபூர்வமான ஹதீஸில் காண முடிகிறத. முஹர்ரம் பத்தாம் நாளில் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)
3.ஆதம்(அலை) , ஹவ்வா (அலை) சுவர்க்கம் சென்றதும், அவர்களின் பாவம் பொறுத்து மன்னிப்பு பெற்றதும் இந்நாளில்தான்.
4.சுவனம், நரகம் சுற்றிப்பார்க்க விழைந்த நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் வானுலகிற்கு உயர்த்தப்பட்டது இந்நாளில் தான்.
5.மீனால் விழுங்பட்ட நபி யூனுஸ் (அலை) அவர்கள் அதன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்நாளில் தான்.
6.நபி தாவூது(அலை) அவர்களின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்கப்பட்டதும் இந்நாளில் தான்.
7.அழகற்ற பெண் ஒருத்தியைப்பார்த்து “இவளையும் ஒருவன் மணப்பானா?” என எண்ணியதற்காக அவர்களையே அழகற்ற உருவாக்கி , அவர்களையே அவளை மணக்கச்செய்து பிறகு பழைய உருவளித்து அரசாங்கத்தையும் இறைவன் நபி சுலைமான்(அலை) அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்ததும் இந்நாளில் தான்.
8.நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் பிறந்ததும்,அவர்களுக்கு ” கலீல்” தோழர் என்னும் அழகுப்பெயரை இறைவன் சூட்டியதும் இந்நாளில் தான்.
9.”நானே இறைவன்” எனக்கூறிய “நம்ரூத்” என்னும் கொடிய அரசன் தூக்கியெறிந்த தீக் குண்டம் பூம்பொழிலாக மாற அதிலிருந்து நபிஇப்றாஹீம் (அலை)அவர்கள் எழில் முறுவலுடன் வெளிவந்ததும் இந்நாளில் தான்.
10.”தன்னை மிக்பெரிய இறைவன்” எனப்பிரகடனப்படுத்திய பிர்அவ்னை செங்டலில் அழித்து நபி மூஸா (அலை) அவர்களை காத்தருளிய நாளும் இந்நாள் தான்.
இந்நாளில் இறைவன் பாவிகளை அழித்திருக்கிறான். புரிந்த பாவம் கூறி இறைஞ்சியவரை மன்னித்திக்கிறான். தன் அருள் இரந்தவருக்கு அதனை அள்ளிக்கொடுத்திருக்கிறான். என இதன் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.
இவற்றுள் “மூஸா (அலை) அவர்களை காத்தருளிய நிகழ்ச்சி மட்டும் தான் இந்நாளில் நடைபெற்றது” என்பற்கு நபி மொழியில் ஆதாரம் உள்ளது. ஏனைய எதற்கும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ எவ்வித ஆதாரமும் இல்லை.
ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு மட்டும் துக்க நாள் ஏன்?
வரலாற்றில் எத்தனையோ புனிதப்போர்கள் நடைபெற்றுள்ளன. அவற்றிலெல்லாம் எத்தனையோ மாண்புமிக்க நாயகத் தோழர்கள் தம் இன்னுயிரையும் உடமைகளையும் இழந்திருக்கின்றனர். படுமோசமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் கோரமாக சிதைக்கப்பட்டுள்ளனர். உருத்தெரியாமல் எதிரிகள் பழிவாங்கியுள்ளனர்.அவர்களையெல்லாம் மறந்துவிட்டு ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு மட்டும் துக்க நாள் அனுஷ்டிப்பது ஏன்?
1.”சுமைய்யா(ரலி), யாஸிர் (ரலி)”
நபித்தோழியர் சுமையா(ரலி) அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு “அபூஜஹல்” என்னும் கொடியோனால் அவர்களின் மர்ம உறுப்பில் ஈட்டியினால் குத்தப்பட்டு மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
அவர்களின் கணவர் யாஸிர் (ரலி) அவர்கள் இருகால்களும் இரு ஒட்டகங்கங்களின் கால்களில் கட்டப்பட்டு எதிரும் புதிருமாக ஓட்டப்பட்டனர். இரு கவடுகளும் கிழிக்கப்பட்டு இருகூராக பிளந்த நிலையில் புழுவாகத் துடிதுடித்து மாண்டனர்.
2.”குபைப் (ரலி)”
நபித்தோழர் குபைப் (ரலி) அவர்கள் மக்காவில் “தன்யீம்” என்ற இடத்தில் கழுமரத்திலேற்றபட்டு எதிரிகள் ஒவ்வொருவரும் தத்தமது பங்காக ஈட்டியாலும் அம்புகளாலும் எறிந்து உருவே தெரியாத அளவுக்கு சிதைத்துக் கொன்று சிரித்து மகிழ்ந்தனர்.
3.”ஹம்ஸா(ரலி)” (ஸைய்யிதுஷ்ஷூஹதா)
ஹம்ஸா (ரலி) அவர்கள் உஹதுப் போர்களத்திலே “வஹ்ஷி”யினால் கொல்லப்பட்டு அவர்களின் உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் வெட்டப்பட்டு நெஞ்சைப்பிளந்து ஈரலையும் குடலையும் கழுத்திலே மாலையாகப் போட்டு எதிரிகள் பழி வாங்கினர்.
4.”ஹபீப் (ரலி)”
நபித்தோழி உம்மு உமாரா(ரலி)அவர்களின் மகன் ஹபீப்(ரலி) என்பவரை” முஸைலமத்துல் கத்தாப்” என்னும் பொய்யன் தன்னை நபியாக ஏற்குமாறு பலவந்தம் செய்தபோது அதை உறுதியுடன் மறுத்துரைத்ததற்காக அவர்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் பிராணிகளை வெட்டுவதைப்போல் துண்டு துண்டாக வெட்டி உயிரோடு பழி தீர்த்துக் கொண்டான் அக்கயவன்.
5.”ஹன்ளலா (ரலி)”
“கஸீலுல் மலாயிக்கா” எனச்சிறப்பிக்கப்படும் ஹன்ளலா(ரலி) அவர்கள் திருமணம் முடித்த இரவு மனைவியுடனிருந்த வேளையில் போர் முரசு கேட்டதும் குளிக்காமலேயே சென்று வீரப்போராடி எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டார்.
6.” முஆத் (ரலி), முஅவ்வித் (ரலி”)
பத்ருப்போரில் இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியும் பிர்அவ்னுமாகிய அபூஜஹலை தம் கைககளாலேயே வெட்டிச்சாய்த்து சமாதி கட்டவேண்டுமென தனித்தனியே வீரசபதம் செய்து ஒரே பாய்ச்சலில் வெட்டி வீழ்த்திய வீர இளைஞர்களான “முஆத், முஅவ்வித்” ஆகிய இருவரை வரலாறு மறக்க முடியுமா? தம் தந்தையை வீழ்த்தியதைக் கண்ட அவரது மகன் “இக்ரிமா” முஆதின் மீது ஒரே பாய்ச்சலிவ் பாய்ந்து அவரது தோளை வெட்டித் துண்டாக்கினார். உடம்பில் தோலுடன் தொங்கிக் கொண்டிருந்த கையை முதுகுக்குப்பின்னால் போட்டுக் கொண்டு அன்று முழுவதும் போராடினார். அது அவருக்கு நோவினை செய்து கொண்டிருந்ததால் அதை அவரது பாதத்தின் கீழ் வைத்து பிய்த்துத் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் போராடினார். வீரதீரச்செயல்கள் செய்து வீரமரணமடைந்த இந்த இளம் தியாகிகளை மறக்க முடியுமா?
7.”ஜஃபர்(ரலி),ஸைத் (ரலி),அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி)”
மூத்தா போரிலே எதிரிகளை வெட்டிச்சாய்த்து வீரப் போராடிய ” தளபதி ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி)” அவர்களின் வலக்கை வெட்டப்பட்டதும் வெற்றிக்கொடியை இடக்கரத்திலே ஏந்தி நின்று போராடினார். அந்தக்கையும் வெட்டப்பட்ட போது எஞ்சி நின்ற இரு கைகளின் துணையால் நெஞ்சோடு கொடியைத் தாங்கிப் பிடித்தார். இறுதியில் மார்பிலே குத்தீட்டி பாய்ந்து கீழே சாய்ந்தார். அதைக்கண்ட இரண்டாவது “தளபதி ஸைத் இப்னு ஹாரிதா(ரலி)” அந்தக்கொடியை பாய்ந்து சென்று பிடித்துக் கொண்டு அவரும் அன்று முழுவதும் போராடினார். அவரும் கொல்லப்படவே மூன்றாவது “தளபதி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி” அப்பொறுப்பை ஏற்று வீரப் போராடினார். அவரும் வெட்டப்படவே அல்லாஹ்வின் வாள்-ஸைபுல்லாஹ்- காலித் இப்னு வலீத்(ரலி) பொறுப் பேற்று வீரப் போராடி வெற்றி பெற்ற வீர வரலாறுகளை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.
8.” ரஜீவில் பத்து பேர் படுகொலை”
ஹிஜ்ரி 4 வது ஆண்டு ரஜீவுக்கு “அளல், காரா” வமிசத்தைச்சார்ந்த மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பிரச்சாரம் செய்யச் சென்ற “ஆஸிஃப் இப்னு தாபித்” தலைமையில் சென்ற 10 பேர் கொண்ட குழுவை ஏமாற்றிக் கொலை செய்து விட்டனர்.(ஆதாரம்:புகாரி).
9.”பிஃரு மவூனாவில் 70 ஹாபிள்கள் படுகொலை”
ரஜீவுடைய துக்ககரமான நிகழ்ச்சிக்குப்பிறகு படுபயங்கரமான ஒரு சம்பவம் நடந்தது.”அபூ பாரா என்ற ஆமிர் இப்னு மாலிக்” என்பவன் நபிகளாரை சந்தித்து தனது பாதுகாப்பில் பிரச்சாரத்துக்கு ஆள் அனுப்புமாறு வேண்ட குர்ஆனை கற்றுத்தேர்ந்த 70 பேரை “முன்திர் இப்னு அம்ரின்” தலைமையில் அனுப்பி வைத்தார்கள் அண்ணல் நபியவர்கள். இவர்கள் அனைவருக்கும் மோசம் செய்து 70 நபர்களையும் பிஃருமவூனாவில் படுகொலை செய்து விட்டார்கள் அந்த நயவஞ்சகர்கள். மோசம் செய்த “ரிஃலு, தக்வான், லஹ்யான, உஸைய்யா” குலங்களுக்கு எதிராக அவர்களை சபித்து நபி (ஸல்) ஒரு மாத காலம் பஜ்ருத் தொழுகையில் குனூத் ஓதி வந்தார்கள்.(ஆதாரம்:புகாரி) இந்த தியாகிகளை வரலாறு மறக்க முடியுமா ?
10. “பத்ருக்களத்தில் 14 வீரத் தியாகிகள்”
“வென்றால் இஸ்லாத்திற்கு வெற்றி! தோற்றால் இனி இஸ்லாம் காலூன்ற முடியாது” என மதில் மேல் பூனையாக நின்றிருந்த வேளையில்
“யா அல்லாஹ்! இஸ்லாத்திற்கு வெற்றியைத்தா! இப்படை தோற்கின் இனி உன்னை வணங்க உலகில் எவருமே இருக்கமாட்டார்கள்”
என பத்ருக்களத்தில் நடுநிசி வேளையில் கையேந்துகிறார்கள் நபியவர்கள். பணபலமும்,படைபலமும்,ஆயுத பலமும் மிக்க ஆயிரம் வீராதி வீரர்களை எதிர்ப்பதற்கு ஒடிந்து போன வாட்களை ஏந்திய ஏழை வீரர்கள் 313 பேர்ககள் மட்டும் தான் இருந்தார்கள்! “அடைந்தால் வெற்றி ! இல்லையேல் வீர சுவர்க்கம்! ” என இறுதி மூச்சிவரை போராடி இன்று வரை உலகம் முழுவதும் இஸலாம் ஒளிவீசக் காரணமாயிருந்த அந்த பத்று ஸஹாபா வீரப் பெருமக்களை, அவர்களில் தன்னுயிரை அர்ப்பணித்த அந்த பதினான்கு பத்ருக்களக் காவலர்களை-தியாகிகளை- எண்ணிப்பார்போர் இன்று எத்தனை பேர்?
11.” உஹதுக்களத்தில் 70 வீரத் தீரர்கள்”
இஸ்லாம் வேரூன்றி ஒளிவிட்டுப்பிரகாசிப்பதைப் பொறாத மக்கத்துக் குரைஷி வெறியர்கள் மூவாயியிரம் பேர்கள் மதீனா எல்லைக்குள்ளே வந்து இஸ்லாத்தை அழிக்க வந்தார்கள். இவர்களை எதிர்க்க வெறும் 700 முஸ்லிம்களைத்தான் திரட்ட முடிந்தது. இறுதியில் வெற்றி தோலவியின்றி முடிந்த போதிலும் இப்போரில் 70 பேர்கள் வீரமரணமடைந்தார்கள். அவர்களில் ஸைய்யிதுஷ்ஷூஹதா (தியாகிகளின் தலைவர்) ஹம்ஸா (ரலி), கோடீஸ்வரராக வாழ்ந்து அடக்கத்துக்கு போதிய கஃபன் துணிகூட இல்லாது போன “முஸ்அப் இப்னு உமைர்(ரலி)”, ஹம்ஸா(ரலி)யின் மைத்துனர் “அபதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்(ரலி)” அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் உறவினர் “ஷம்மாஸ் இப்னு உத்மான்” ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
12. இரண்டாவது கலீபா உமர்(ரலி), மூன்றாவது கலீபா உத்மான் (ரலி)
இதைப்போல் இரண்டாவது கலீபா உமர்(ரலி), மூன்றாவது கலீபா உத்மான் (ரலி) ஆகீயோரெல்லாம் படுகொலைசெய்யப்பட்டு இரத்த ஆற்றிலே மிதந்த சோக நிகழ்ச்சிகளையெல்லாம் இஸ்லமிய வரலாறு மறக்க முடியாது.
பஞ்சா எடுப்போரும், துக்கநாள் கொண்டாடுவோரும் இவர்களுக்கெல்லாம் துக்கநாள் அனுஷ்டிப் பார்களா? கண்ணீர்வடிப்பார்களா? பஞ்சா எடுப்பார்களா?
13.ஹுஸைன் (ரலி)
இதைப்போல் ஆயிரமாயிரம் வீரமரணங்கள் வரலாற்றிலே அடுக்கடுக்காக நிகழ்ந்துள்ளன. அந்த வரிசையில் நபியின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்களின் கர்பலா படுகொலையும் நிகழ்ந்துள்ளது.நெஞ்சுருக்கும் இப்படுகொலை ஒவ்வொரு முஸ்லிம்களின் நெஞ்சை ஒடிக்கும் துக்ககரமான நிகழ்ச்சியென்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
ஆயினும், நபித்தோழர்களில் ஏனையோர் எவருக்கும் காட்டாத முக்கியத்தை, இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு இவர்களில் எவருடைய படுகொலை நாட்களையும் துக்க நாளாகக் கருதாமல், ஹுஸைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட (முஹர்ரம் பத்தாம்) நாளை மட்டும் இன்று ஷிஆக்கள் துக்க நாளாகக் கொண்டாடுவது எவ்வாறு நியாயமாகும்?
இஸ்லாத்தின் மீது அவர்கள் பற்றுள்ளவர்கள் என்றால் ஏனைய நபித்தோழர்களின படுகொலைகளயும் துக்க நாளாக கொண்டாட வேண்டியது தானே ? அவர்களுக்கும் பஞ்சா எடுக்க வேண்டியது தானே?
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் பெயரால் “பஞ்சா’ கூத்துகள்!
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூருவதற்குப் பதிலாக அந்நாளில் அவர்கள் செய்யும் வேடிக்கைகள்,வீண் விளையாட்டுகள் அந்நாளை மாசுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. கர்பலாவில் உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் தலைகளையும், கைகளையும் அரிந்து அவற்றைத் தாம் வாள் முனையில் குத்திச் சென்று “யஸீதிடம்” காட்டினர் கொடியோர். அதனையே இங்கு மக்கள் கைவிரல்கள் போல் செய்து “பஞ்சா’ எனக்கூறி கூத்தடிக்கின்றனர். இது அம்மாவீரர்களை மதிப்பதாகாது. அவர்கள் செய்த மகத்தான தியாகத்தை கெளரவித்ததாகாது.
மேலும் தலை,கை, கால், விரல்களை மாப்பண்டங்களாகச் செய்து உண்டு மகிழ்கின்றனர். இது நரமாமிசம் உண்டதைப்போல் ஆகாதா?
“ஷீஆக்கள்”.
நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு அபூபக்கர்(ரலி), உமர் (ரலி) ஆகியோர் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்கள். பின்னர் உத்மான் (ரலி) ஆட்சிக்கு வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதன்பிறகு அலி(ரலி) பொறுப்றேகிறார்கள். இங்கே தான் பிரச்சனையே எழுகிறது. உத்மான்(ரலி) அவர்கள் உமைய்யா குலத்தைச் சார்ந்தவர்கள். உமைய்யா குலத்தினர் கொலைக் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தண்டனை வழங்கவேண்டுமென அலி(ரலி) அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். அலி(ரலி) அன்றையஅரசியல் சூழ்நிலையில் குற்றவாளிகளைக்கண்டுபிடித்து தண்டிப்பதில் காலதாமதமாகிக்கொண்டிருந்தது. வேண்டுமென்றே அலி(ரலி) காலதாமதம் செய்கிறார் என -ஒருபிரிவார் எதிர்த்தனர். இவர்கள் காரிஜாக்கள்-எதிர்ப்பாளர்கள்- எனப்படுவர். மற்றொரு பிரிவார் அலி(ரலி) அவர்களை ஆதரித்தனர். ஆதரவாளர்கள் ஷீஆ எனப்படுவர். எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் தங்களின் வாதங்களுக்கு மதச்சாயம் பூசினர்.
அலி(ரலி) அவர்களை மட்டும் வானளாவப் புகழ்வர்.
அலி(ரலி) அவர்களை ஆதரிக்கும் ஷீஆக்கள் ” நபி(ஸல்) அவர்கள் அலிக்கு இரகசிய ஞானம் வழங்கினார்கள். தனக்குப்பிறகு அலி தான் ஆட்சிக்கு வரவேண்டுமென வசிய்யத் செய்தார்கள். ஆனால் அபூபக்கர், உமர் ஆகியோர் அலியை ஏமாற்றிவிட்டு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார்கள்” எனக் கூறுகின்றனர். அதற்கும் ஒருபடி மேற்சென்று வானவர்கோன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் “நுபுவ்வத் என்னும் இறைத்தூததை” அலிக்குத்தான் கொண்டுவந்தார்கள். அப்போது அலி சிறுவராக இருந்ததால் தவறுதலாக முஹம்மதுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.நாயகத்தோழர்களில் ஸல்மானுல் ஃபாரிஸி(ரலி) அபூமூஸல் அஷ்அரி(ரலி) இருவரை மட்டுமே ஏற்கின்றனர். ஏனையோர் அத்தனை பேரையும் காஃபிர்கள்(இறை நிராகிப்பாளர்கள்) என்றே வாதிடுகின்றனர்.
அதோடு நிற்காமல் நபி ஈஸா(அலை) அவர்களைப்போன்று அலி (ரலி) வானுலகத்தற்கு உயர்த்தபட்டார்கள் என்று கூறத்தலைப்பட்டுவிட்டனர்.அவர்களை கடவுள் நிலைக்கே கொண்டுசென்றுவிட்டனர்.
அரசியல் ரீதியாகத் துவங்கி குடும்ப ரீதியாக போய்விட்டது. ஷீஆக்கள், அலியை மட்டுமல்ல, அவர் மனைவி ஃபாத்திமாவின் திருமணத்திற்கு ஜிப்ரீல்(அலை) சுவர்க்கத்திலிருந்து தாலியைக்கொண்டு வந்தார்கள் என்ற அளவுக்கு புகழத்துவங்கிவிட்டார்கள். அதையும் தாண்டி அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெய்வீகத் தன்மையை வழங்கி கடவுள் நிலைக்கே உயர்த்தி விட்டனர்.
அவர்களது பாடலில் ” லீ கம்ஸத்துன் உத்ஃபீஹா ஹர்ரல் வபாயில் காத்திமா, அல்-முஸ்தபா வல்முர்த்தளா வப்னாஹீமா வல்பாத்திமா” .
“சோதனைகள் ஏற்படும் வேளையில் என்னைப் பாதுகாக்க ஐந்து கடவுள்கள் உள்ளனர். மோசமான முடிவேற்பதை விட்டும் அந்த ஐந்து கடவுள்கள் மூலம் என்னைக் காப்பாற்றிக் கொள்வேன். அவர்கள் நபி முஸ்தபா, அலி முர்தளா, அலியின் பிள்ளைகளான ஹஸன்,ஹ’ஸைன், பாத்திமா ஆகியோராவர்” என்குறிப்பிடுவதிலிருந்தே அவர்கள் எந்த நிலைக்குச்சென்று விட்டனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
“அலி (ரலி) கடவுளின் அவதாரம்”
இந்த ஐவரையும் மனதிற்கொண்டே “பஞ்சா” எடுக்கின்றனர். “பஞ்சா” என்றால் உர்து மொழியில் ஐந்து என்று குறிப்பிடப்படும். இவர்களின் குடும்பத்திலுள்ளவர்களே தீட்சை-ஞானம்- வழங்கும் பேறு பெற்றவர்கள். அந்த நிலையை அடைந்தவர்களை இமாம்கள்- தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். அவர்கள் பன்னிருவர் என்றும், இவர்களெல்லோரும் தெய்வீகத்தன்மை பெற்றவர்கள் என்றும் அலியை கடவுளின் அவதாரம் என்றும் கூறுகின்றனர்.
” ஷீஆக்கள் கூறும் தெய்வீகத்தன்மை பெற்ற பன்னிரு இமாம்கள்”
அவர்கள் 1.அலீ, 2. ஹஸன், 3.ஹ’ஸைன், 4.ஸைனுல்ஆபிதீன், 5. முஹம்மது பாக்கிர், 6. ஜஃபா ஸாதிக், 7.மூஸல் காளிம், 8.அலி ரிளா, 9. முஹம்மது அத்தகீ. 10. முஹம்மது அந்நகீ, 11. ஹஸனுல் அஸ்கரீ,12. அலமஹ்தீ ஆகிய பன்னிருவரே அந்த இமாம்கள்.
இன்று அவ்லியாக்கள் என்று கூறப்படுவோரெல்லாம் அலியின் குடும்பத்திலிருந்து தோன்றியவர்களே! அவர்களின் ஸில்ஸிலா-குடும்பச்சங்கிலி- அலியுடன் தான் முடிவடைகிறது என்றும் கற்பிக்கின்றனர்.
“அலி சொன்னது மட்டும் தான் ஹதீஸ்” ஏனையோர் அறிவிக்கும் ஹதீஸ்களை இவர்கள் ஏற்பதில்லை. ஸிஹாஹ் ஸித்தா போன்ற எந்த ஹதீஸ் நூற்களையும் இவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. இவர்கள் நபி (ஸல்) சொன்னார்கள் என்றால் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆனால் அலி சொல்லிவிட்டார்கள் என்றால் கண்களை மூடிக்கொண்டு உடனே ஒத்துக்கொள்வார்கள்.
“ஆயத்துல்லாஹ்”
இவர்கள் தங்களின் மதத்தலைவர்களுக்கு “ஆயத்துல்லாஹ்- அல்லாஹ்வின் அத்தாட்சி” எனப் பட்டம் சூட்டுகின்றனர். ஈரான் அதிபர் கோமேனியையும் அவருக்குப்பிறகு வந்தவர்களையும் ஆயத்துல்லாஹ் என்றே அழைக்கின்றனர். கிறித்தவ மதத்தலைவர் போப்பாண்டவரைப் போல் மதித்து இவர்களை மலர் தூவி வரவேற்கின்றனர்.
“தனிமனித வழிபாடு கூடாது.”
இஸ்லாத்தில் தனி மனித வழிபாடு கூடாது! குரு வழிபாடு கூடாது! குடும்ப வழிபாடு கூடாது! என்பதைப் பெருமானார் (ஸல்) மிகத்தெளிவாகவே உலகுக்குப் போதித்துள்ளார்கள்.
“துக்க நாள்”
இஸ்லாத்தில் துக்க நாள் என்பதே கிடையாது. ஒருவருக்கு ஒருநாள் நல்லநாள் என்றால் அது மற்றவர்ருக்கு கெட்டநாளாக இருக்கும். ஒருவர் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அது அவருக்கு நல்ல நாளாகும். அதே நாளில் அன்று ஒருவர் இறந்து விட்டால் அது அவருக்கு கெட்டநாளாகும். ஹ~ஸைன் (ரலி)படுகொலை செய்யப்பட்ட அதே நாள், மூஸா(அலை) அவர்களுக்கு வெற்றி கிடைத்த நாளாகும். எனவே நாளில் நல்லது கெட்டது என்பது கிடையாது. பின் ஏன் இவர்கள் அந்த நல்ல நாளை கெட்ட நாளாக – துக்க நாளாக-க்கொண்டாடுகிறார்கள் ?
“சிறந்த நாள்! நன்றி தெரிவிக்கும் நாள்”
இது சிறந்த நாள்! நன்றி தெரிவிக்கும் நாள்!! அசத்தியத்திலிருந்து சத்தியத்தை காத்த நள!!! துக்க நாளல்ல என்பதை உலகறியச்செய்வோமாக!
“முஹர்ரம் பத்தாம் நாள்”
“இது வெற்றிக்குரிய நாள்! மூஸா(அலை)வெற்றிபெற்ற நாளுக்கு நன்றி செலுத்திய நாள்!” நன்றி செலுத்து வதற்காக நோன்பிருந்த நாள்! அதே நன்றியுணர்வை வெளிப்படுத்தி நோன்பிருக்க பெருமானார்(ஸல்) அவர்களும் தேர்ந்தெடுத்த நாள்! துக்கத்தை கொண்டாடும் நாளாகவோ மார்பிலே அடித்து இரத்தம் சிந்தும் நாளாகவோ கொண்டாடிட அது பெருமானாரால் கட்டளையிடப்படவில்லை.
“ஆஷூரா” நாளில் அனாச்சாரங்கள்”
இன்று முஹர்ரம் பத்தாம் நாள் (“ஆஷூரா” நாள்) நடை பெறும் அனாச்சாரங்கள் வேடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கே எதிரானவை. எதிரிகள் ஹ’ஸைன் (ரலி) அவர்களின் தலை, கை,கால், விரல்களை வெட்டி பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்டார்கள்.ஆனால் இவை நமக்கு எதிராகச் செய்யப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ளாது ஷீஆக்கள் ஐந்து விரல்களைச்செய்து பஞ்சா எடுத்து ஆட்டம் போடுகிறார்கள். தலை, கை,கால், விரல்களை மாவினால் பணியாரம் செய்து சாப்பிடுகிறார்கள். இது நரமாமிசம் சாப்பிடுவதைப் போன்று ஆகாதா?
கைகளினால் தன்னையே குத்திக்கொண்டும் செஞ்சிலே அடித்துக்கொண்டும் சோகத்தைக்காட்ட சட்டைகளை கிழித்துக் கொண்டும் போடும் பேயாட்டங்களும், யா ஹ’ஸைன் எனக்கத்திக்கொண்டும் இரத்த ஆறுகளை ஓட்டிக்கொண்டு செய்யும் அடாத கொடுமைகளும் இஸலாத்திற்கே எதிரானவை யல்லவா? நபி (ஸல்) அவர்கள் இவற்றையெல்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
” கன்னத்திலே அடித்துக் கொள்பவர்களும், சட்டைகளை கிழித்துக்கொள்பவர்களும், அறியாமைகால மக்களைப் போல் கூப்பாடு போடுபவர்களும் நம்மைச்சார்ந்தவர்களல்லர்.” என எசசெரித்துள்ளார்கள்.
இவை போதாதென்று இந்துக்களைப்போல் தீமிதித்து தம்மை வதைத்தும் கொள்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் “அபூ இஸ்ராயீல் என்பவர் செருப்பணியாமல் வெய்யிலிலே நடந்து வந்தார். அது பற்றி அவரிடம் காரணம் கேட்டபோது “தாம் செருப்பணிவதில்லையென்றும், எங்கும் நடந்தே செல்வது என்றும், வெய்யிலிலே நிற்பது என்றும் தாம் ஒரு நேர்ச்சை செய்து கொண்டதாக” அவர் விளக்கம் கூறினார்.
அதைக்கேட்டதும் நபியவர்கள் ” நிச்சயமாக இவ்வாறு ஒரு மனிதர் தன்னை வதைப்பதை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்” என கடுமையாகக் கண்டித்தார்கள்.
நபியவர்கள் வெய்யிலிலே நிற்பதையே தடுத்தார்கள் என்றால் தீமிதிப்பதையும் பஞ்சா எடுப்பதையும் எப்படி அனுமதிப்பார்கள்?
“யார் பக்கம் நியாயம்?”
இந்த போராட்டத்திற்காக கச்சை கட்டிக்கொண்டு தமது குடும்பத்திலுள்ள பெண்கள்,சிறுவர்கள்,குழந்தைகள் உட்பட 72 பேர்களை அழைத்துக்கொண்டு ஹ’ஸைன் (ரலி) அவர்கள் கூபாவை நோக்கிப்புறப்பட்டார்களே! இவர்களின் பக்கம் நியாயமிருந்திருந்தால் அன்று வாழ்ந்த ஏனைய ஸஹாபா பெருமக்களெல்லோரும் ஆதரவு தெரிவித்து களத்திலே இறங்கியிருப்பார்கள். இப்னுஅப்பாஸ், இப்னுஉமர், அபூஸயீதுல் குத்ரிய்யி, ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் போன்றவர்களெல்லாம் “போருக்கு செல்ல வேண்டாம்” எனத் தடுத்தார்கள்.
ஏனெனில் இது ஒரு இஸ்லாமியப்போரல்ல. யஸீதுக்கெதிரான ஒரு போராட்டம்! யஸீது நல்லவரா? கெட்டவரா? என அவருக்கெதிராக நடை பெற்ற ஒரு போராட்டம்.
யஸீது நல்லவராக இருந்தால் அவருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். தீயவராக இருந்தால் தண்டனை வழங்குவான். இதுபற்றி இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது எதற்கு வீணாக நீங்களெல்லாம் அலட்டிக்கொள்கிறீர்கள்?
” அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு! அவர்கள் செய்தது பற்றி உங்களிடம் விசாரிக்கப்படமாட்டாது” (அல்-குர்ஆன்2:134)
என்ற வசனத்தையே இவர்களுக்காகவே அருளப்பட்டதைப்போன்று அவர்கள் ஓதிக்காட்டி பதிலாகச் சொன்னார்கள். என்பது இங்கே சிந்திக்கத்தக்கதாகும்.
எனவே, இங்கே இறைவனின் எச்சரிக்கையைப்பாருங்கள்:-
” உங்களுக்கு எதில் அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதீர்கள். நிச்சயமாக காது ,கண், இதயம் ஆகியவை பற்றி விசாக்கப்பட்டே தீரும். (அல்-குர்ஆன்17:36.)
திருமறையின் அறிவுரைக்கேற்ப யாரையும் குறை கூறாது, விமர்சனம் செய்யாது பாவத்திற்கு ஆளாகாமலிருப்பது தான் சிறந்த அம்சமாகும்.
“தேவையற்றதை விட்டு விடுவாயாக”என்ற நபி மொழியின் படி நம்மை நாம் காத்துக் கொள்வோமாக!.
என்ற நபி மொழியின் படி நம்மை நாம் காத்துக் கொள்வோமாக!.
Leave a Reply
You must be logged in to post a comment.