அருஞ் சொற்களஞ்சியம்-2
May 4th, 2010 by Ahmad Baqavi
தொகுதி 2. (உ முதல் கை வரை) எழுத்து வரிசை: உ,ஊ,எ,ஏ,க,கா,கி,கீ,கு,கூ,கை)
உம்ரா
عمرة
நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்பன பொருளாகும்.”லப்பைக்க உம்ரத்தன்” உம்ராவுக்காக நிய்யத் வைத்து கஅபாவை 7 தடவைகள் இடப்பக்கமாக (தவாஃப்) வலம் வந்து 7 தடவைகள் ஸஃபாவி லிருந்து மர்வா வரை ,அது போல மர்வாவிலிருந்து ஸஃபா வரை ஸஈ செய்து நிறைவு செய்யும் ஒரு வகை வணக்க வழிபாடாகும். (2:196) ஹஜ்ஜு வழிபாட்டிற்கு குறிப்பிட்ட காலம் உண்டு. உம் ராவுக்கு கால நிர்ணயம் இல்லை.
உம்மீ
أمي
உம்மீ என்றால் தாயைச் சார்ந்தவர் என்று பொருள்.பொதுவாக எழு தப் படிக்கத் தெரியாத தாயின் இயலபுகளை மட்டுமே பெற்ற மனிதனை உம்மீ என்பர் அரபுகள். நபி(ஸல்)அவர்களின் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் அரிதாகவே இருந்தனர். எனவே அந்த மக்கள் உம்மிய்யூன் என்று அழைக்கப்பட்டனர். அவர்களிடையே தாம் நபி (ஸல்) அறிவொளியை ஏற்றி வைத்தார் கள். நபி(ஸல்) அவர்களும் எழுதப் படிக்கத் தெரியாத ” உம்மீ” யாகவே விளங்கினார்கள். குர்ஆனில் மூன்று இடங்களில் “உம்மிய் யூன்” என்ற சொல் பயன்படுத் தப்பட்டுள்ளன. (பார்க்க 3: 20,3:75, 62:2 )
உம்மு
أم
தாய் என்று பொருள். அரபுகள் பெண்களை முதல் பிள்ளையின் பெயரால் உம்மு காஸிம், உம்மு அப்துல்லாஹ், உம்மு ஸுலைம், உம்முஹராம், உம்மு ரூமான்,உம்மு உமாரா,உம்மு வரக்கா என்று அழைப்பது வழக்கம்.
உம்முல் குரா
أم القري
நகரங்களின் தாய். உலகிலே இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் இறைஆலயம் தோன்றி அதை நோக்கி மக்கள் குடியேறிதால் அதற்கு “நகரங்களின் தாய்” எனப் பெயர் ஏற்பட்டது. மக்காவில் “உம்முல் குரா” என்ற பெயரில் ஒரு இஸ்லாமியப் பல்கலைக் கழகமும் உள்ளது.
உள்ஹிய்யா (மிருகபலி)
أضحية
“உள்ஹிய்யா” என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
(ஆதாரம் – புகாரி)
உள்ஹிய்யா பெருநாள் அன்றும் அதன்பிறகு பிறை 11,12,13-ம் நாள் அஸர் வரை கொடுக்கலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னரோ, 13-ஆம் நாளின் அஸ்ருக்குப் பிறகோ கொடுக்கப்படும் மிருக பலி “உள்ஹிய்யாவாக” ஆகாது.
உளு
وضوء
அங்கத் தூய்மை எனபது பொருள். தொழுகை போன்ற இறைவழி பாடு களை நிறைவேற்றுவதற்கு முன்னால் முகம், கை,தலை,கால் ஆகிய உறுப்புகளை அல்லாஹ் ஆணைப்படியும், நபிகளாரின் வழிமுறைப்படியும் தூய்மை செய்யும் முறை. (5:6)
உஹுத்
أحد
மதீனாவுக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயர்.ஹி 3-ஆம் ஆண்டு (க்.பி 625) ஷவ்வால் மாதம் மத்தியில் முஸ்லிம்களுக்கும் மக்கத்துக் காபிர்களுக்கு மிடையே நடைபெற்ற போரே “உஹுத்” எனப்படும்.
ஊகியா
أوقية
சுமார் 38.5 கிராம்எடையுள்ள ஓர் அளவு.
கஅபா
كعبة
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் அல்லாஹ்வை வணங்கு வதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் தான் கஃபா.( 3:96)
இதிலிருந்து ஆதம்(அலை) அவர்கள் இங்கு தான் வசித்தார்கள் என அறியலாம்.அவர்களுக்குப் பலகாலத்திற்குப்பின் கஃபா சிதைந்து போனது.பின்னர் இப்றாஹீம் நபி அந்த இடத்தை கண்டுபிடித்து தம் மனைவி ஹாஜரையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினர்.
அங்கே இறைவனின் அற்புதமாக வற்றாத நீர் ஊற்றாக ஸம்ஸம் நீர் ஏற்பட்டு இன்று கால்கோடிமக்களுக்கு நாள்தோறும் பயன்பட்டு வருகிறது.அந்த ஜீவ ஓற்றின் காரணமாக பாலைவனம் ஊராகி பெரும் நகராகியது. மீண்டும் அங்கே தந்தையும் மகனும் முதல் ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்தனர். இங்கே உலகமக்களில் வசதி படைத்தோர் ஆண்டுதோறும் வந்து ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவது கடமையாகும்.
கனீமத்
غنيمة
போரில் கிடைக்கும் வெற்றிப் பொருள்.
கப்ர்
قبر
இறந்தவரை அடக்கம் செய்யப்படும் குழிக்கு ‘கப்ர்’ (புதைகுழி) என்று சொல்லப்படும்.”மக்பரா” என்றும் கூறப்படும்.இந்திய பாக்கிஸ்தான் முஸலிமகள் “கப்ருஸ்தான்” என்று கூறுவர்.
கபீலா
قبيلة
கோத்திரம்.கிளை.
கலீஃபா
خليفة
பிரதிநிதி, இஸ்லாமிய ஆட்சித் தலைவர்,ஆட்சியாளர் எனபது பொருளாகும். முதற் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் பிரதிநிதியாக ஆட்சி புரிந்ததால் “கலீஃபத்து ரஸூலில் லாஹ்” இறைதூதரின் பிரதி நிதியென்று அழைக்கப்பட் டார்கள். அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த உமர் (ரலி) ‘கலீஃபத்து கலீபத்து ரஸூலில்லாஹ்’ “இறைதூதரின் பிரதிநிதியின் பிரதிநிதி” என அழைக்கப்பட்டார்கள். பின்னர் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக் கெல்லாம் “கலீஃபா” என்று அழைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது.
கவ்மு
قوم
கூட்டம். (உ-ம்) கவ்மு நூஹ் (நூஹ்நபியின் சமுதாயம்),கவ்மு லூத்,கவ்மு இபறாஹீம்,கவ்மு பிர்அவ்ன், கவ்மு துப்பஃ, கவ்மு ஆத் (ஆது சமுதாயம்)கவ்மு தமூத் (தமூத் சமுதாயம்) என கவ்மு என்பது 378 தடவைகள் கூறப்பட்டுள்ளன.
கஸம்
قسم
ஆணை என்பது பொருள்.
1. குர்ஆனில் மொத்தம் 39 அத்தியாயங்களில் 92 வசனங்களில் ஆணைக்குரிய (சத்தியம்) சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. அவற்றுள் இறைவன் 23 அத்தியாயங்களை சத்தியமிட்டே துவங்கியுள்ளான்.
3. தனது படைப்புகளின் மீது சத்தியமிட்டுக்கூறும் இறைவன் தன் மீதும் தன் வல்லமையின்மீதும் சத்தியமிட்டு 20 இடங்களிலே கூறுகிறான்.
4. தனக்கு நெருக்கமான வானவர்கள், மனிதர்களில் பெற்றோர், பிள்ளைகள் என பொதுவாக சத்தியமிட்டுக்கூறும் இறைவன்,தனது ஹபீபாகிய நபிகள் நாயகத்தின் மீது மட்டும் ஒரே ஒரு இடத்தில் (15:72 ல்) சத்தியமிட்டுக்கூறுவது அவர்களைச் சிறப்பிததுக்காட்டுகிறது. இது வேறு எந்த மனிதர்களுக்கும், நபிமார்களுக்கும் இல்லாத மிகப்பெரும் மாண்பாகும்.
(15:72 (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.)
5. இறைவன் தன்மீதும் தன் படைப்புகள் மீதும் ஆணையிட்டுக் கூறுவதை மேலுள்ள எல்லா வசனங்களிலும் காணலாம். ஆனால் ஒரே ஒரு வசனம் மட்டும் பிர்அவ்னை அவனது சூனியக்காரர்கள் பெருமிதத்துடன் ஆணையிட்டுக்கூறுவதாக வருகிறது. சத்தியமிட்டுக் கூறப்படும் வசனங்களில் (பா என்ற ஆணைச் சொல்லில்) ஒன்றாக வருவதால் அதை நாம் இங்கே குறிப்பிடுகிறோம்.அந்த வசனம் இது தான்.
26:44 ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடை வோம்’ என்று கூறினார்கள்.
ஆணைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள எல்லா வசனஙகளையும் தெரிந்து கொள்ள ” குர்ஆனில் ஆணையிட்டு வரும் வசனங்கள்” என்ற நமது தலைப்பைப் பார்க்க)
கஸ்வா (கஸ்வத்)
غزوة
அறப்போர்.மதீனாவை தலைநகராகக் கொண்ட இஸலாமிய நாட்டை யும், நாட்டு மக்களையும் காப்பதற்காக இறைவனின் ஆணைப்படி நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் புறப்பட்டுச் சென்ற போருக்கு கஸ்வா (கஸ்வத்) என்பர். இதன் பன்மை கஸவாத் ஆகும். நபி (ஸல்) அவர்கள் தலைமையில் 19 போர்கள் நடைபெற்றன.இவற்றில் எட்டு போர்களில் மட்டுமே நபியவர்கள் நலந்து கொண்டனர்.
காரிஜிய்யா ( கவாரிஜ்)
خارج ، خوارج
கிளர்ச்சியாளர்கள் என்பது பொருளாகும்.நானகாம் கலீஃபா அலீ பின் அபீ தாலின் (ரலி) அவர்களது ஆட்சி காலத்தில் இஸ்லாமிய ஆட்சிக் கெதிராகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட வன்முறையாளர் களை இது குறிக்கும். இராக்கில் கூஃபா நகருக்கருகில் ” ஹரூரா” என்ற இடத்தில் தான் இவர்களின் முதற்கூட்டம் நடைபெற்றது. எனவே இவர்களை “ஹரூரிய்யாக்கள்” எனக் கூறுவதுமுண்டு. பக்தாதுக் கருகில் “நஹர்வான் என்னும் இடத்தில் ஹஜ்ரி 37(கி.பி 658) ஆம் ஆண்டு கலீபா அலீ (ரலி) அவர்களால் இவர்கள் தோற்கடிக்கப் பட்டார்கள்.
இருப்பினும் இவர்களின் குழப்பம் தொடர்ந்தது.இவர்களின் குழுவைச் சார்ந்தவனான அப்துர்ரஹமான் பின் முல்ஜிம் என்பவனால் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
காஃபிர்
كافر
அல்லாஹ்வை மறுப்பவன்.நிராகரிப்பவன்.
காஸிர், ( காஸிரூன், காஸிரீன், குஸ்ரான்)
خاسر، خسرين، خاسرون، خسران
காஸிர் : நஷ்டவாளர், காஸிரூன்,காஸிரீன் – : நஷ்டவாளர்கள் என்பது பொருளாகும். கஸிர, நஷ்டம் என்ற பொருளைக் காட்டும் கஸிர : 25 இடங்களிலும், கஸிரூ: 9 இடங்களிலும், குஸ்ரான்: 3 இடங்களிலும், காஸிரூன்: 14 இடங்களிலும்,காஸிரீன்: 18 இடங்களிலும், காஸிரத் : ஒரு இடத்திலும் வருகின்றன். குர்ஆனில் நஷ்டமடைந்தோர் யாவர் ? என்று 60 க்கு மேற்பட்ட இடங்களில் விளக்கப்படுகின்றன. இவர்கள் யாவர் என்பதை “குர்ஆன் கூறும் நஷ்டவாளர்கள்” என்ற தலைப்பைப் பார்க்கவும்.
கிப்லா
قبلة
கஅபா இருக்கும் திசை. உலக முஸ்லிம்கள் யாவரும் மக்காவி லுள்ள புனித இறையில்லம் கஃபாவை நோக்கியே தொழவேண்டும். கஃபா உள்ள திசை “கிப்லா” என அழைக்கப்படுகிறது.
கிஸ்வா
كسوة
கஃபாவின் மேல் போர்த்தப்படும் கறுப்பு நிறபோர்வைக்கு ‘கிஸ்வா’ எனப்படும்.கஃபாவை முதன் மதலாகப் பேர்த்தியவர் நபி இஸமாயீல் (அலை) அவர்கள் என்று கூறப்படுகிறது. ஆயினும் யமன் நாட்டை ஆண்ட “துப்பவு” என்பவரே யமன் நாட்டில் நெய்யப்படும் “புர்தா யமனீ ” என்னும் சிறந்த போர்வையால் போர்த்தப்பட்டுவந்தது. இது நீண்ட காலமாக எகிப்திலிருந்து தயாரிக்கப்பட்டு வந்தது.பின்னர் மன்னர் பைஸலுடைய ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டு மக்காவிலிருந்து ஜித்த செல்லும் பழைய சாலையில் 20-வது கிமீட்டர் தொலைவில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டு அங்கே தயரிக்கப்படுகிறது. (பார்க்க் அல்பாக்கவி.காம் இணைய தளத்தில் கிஸ்வா முழுவிவரம்)
கிஸ்ஸா (கிஸ்ஸத்)
قصة
வரலாறு, கதை. இவற்றுள் ஆதாரமற்ற செய்திகளும் இருக்கலாம்.
குத்பா
சொற்பொழிவு. இமாம் நடத்தும் ஜும்ஆ, பெருநாள் சொற்பொழிவு களுக்கு மட்டுமல்ல. எந்தச் சொற்பொழிவானாலும் அரபியில் குத்பா (சொற்பொழிவு) என்று சொல்லப்படும்.
குஃப்ர்
كفر
நிராகரித்தல்,இறைவனையோ,அவன் தூதரையோ ஏற்காதிருத்தல்.
குபா
قباء
மதீனாவிற்கு தென் மேற்கே மூன்று மைல் தொலைவிலுள்ள ஒரு பழைய கிராமத்தின் பெயர்.
குபா பள்ளி வாசல்
مسجد قباء
ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் நான்கு நாட்கள் குபாவில் தங்கி சிறிய அளவில் மஸ்ஜித் (தொழுமிடம்) ஒன்றை அமைத்தார்கள். கட்டிடப் பணியில் தம் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். (பார்க்க மஸ்ஜித் குபா)
குமுஸ்
خمس
இதற்கு ஐந்தில் ஒரு பாகம் என்று பொருள். போரில் கிடைத்த செல்வங்களில் நான்கு பாகம் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மீதமுள்ள ஒரு பாகம் (1/5) இறைதூதருக்கு உரிய நிதியாகும்.இதை குமுஸ் என்பர். இந்நிதியை சமூக நலனுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும், அனாதை களுக்கும் நபி (ஸல்) அவர்கள் செலவிடுவார்கள். (பார்க்க:8:41)
குர்ஆன்
قرآن
ஓதுதல், ஓதப்படவேண்டியது என்பது பொருள். முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குஇறைவனால் வானவர் ஜிப்ரீல் மூலமாக அருளப்பட்ட வேத வெளிப்பாட்டிற்கு குர்ஆன்எனப்படும்.இது 23 ஆண்டுகாக 486 தடவைகளாக அருளப்பட்டன.
குர்பான்-(குர்பானி)
قربان
அல்லாஹ்வின் பெயரால் அறுக்கப்படும் பிராணி. அல்லாஹவின் பெயர் கூறப்படாமல் அறுக்க்கப்பட்ட பிராணிகளை உண்பது ஹராம் தடுக்கப்பட்டுள்ளது. (2:173,3:3)
குறைஷி
قريشي
குறைஷியா. இறைதூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய வழித்தோன்றலகளில் நள்ர் பின் கினானாவின் சந்ததிகளாகிய அரபு இனத்தினர்.நபி (ஸல்) அவர்கள் அரேபியாவின் மிகவும் உயர் குலமாக மதிக்கப்பட்ட இந்த குறைஷி குலத்தில் தோன்றியவர்களே!
குனூத்
قنوت
இச்சொல்லுக்கு தொழுகையில் உள்ளச்சம்,வெளிப்பேச்சு பேசாதி ருத்தல்,நீண்ட நேரம் நிற்றல்,பிரார்த்தனை செய்தல், தியானித்தல், இறைக்கட்டளையை நிலை நாட்டுதல்,கீழ்படிதல் எனப் பல பொருள் கள் உள்ளன. தொழுகையில் நினறபடி ஓதப்படும் ஒரு குறிப்பிட்ட சிறப்புப் பிரார்த்தனையை (துஆவை) இது குறிக்கும். எதிரிகளால் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடுவது போன்ற சோதனைகள் நேரும் போது தொழுகையில் ஓதப்படும் பிரார்த்தனையை “குனூத்” சோதனை காலப் பிரார்த்தனை என்பர்.
கூபா
كوفا
இராக்கில் யூப்ரடீஸ் நதிக்கு மேற்கே அமைந்துள்ள பெரிய நகரம். இந்நகரத்தை நபித் தோழர் ஸஅத் இப்னு வக்காஸ் (ரலி) அவர்கள், கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் காதிஸிய்யா போருக் குப்பின் நிறுவினார்கள்.
கைபர்
خيبر
மதீனாவிலிருந்து சிரிய (ஷாம்) நர்டிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள பெரிய நகரம்.ஹிஜ்ரி-7 (கி.பி.628-ஆம் ஆண்டில் இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கும், யூத இணைவைப்பாளர் களுக்குமிடையே நடைபெற்ற போரே ” கைபர்” போர் எனப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.