அருஞ் சொற்களங்சியம்-3
May 7th, 2010 by Ahmad Baqavi
(ச முதல் மீ வரை: அகர வரிசை: ச,சா,த,தா,தி,தீ,து,தூ, தை, ந,ப,பா,பி,பீ,பு,பூ,பை,ம,மா,மி,மீ,மு.மூ,மை)
சாயிபா
سائبة
அரபுகள் நேர்ச்சைக்காக சில ஒட்டகங்களை தங்கள் தெய்வங்க ளுக்காக விட்டுவிடுவார்கள். அவற்றில் யாரும் ஏறிச் செல்வது கூடாது. என்றும் முடிவு செய்திருந்தனர். இத்தகையை ஒட்டகங்களை ‘சாயிபா’ (سائبة ) எனக்குறிப்பிடுவர். (பார்க்க : 5:103)
தக்பீர்
تكبير
‘அல்லாஹு அக்பர்’ அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறுவதற்கு “தக்பீர்” எனப்படும்.அதானிலும்,தொழுகையிலும், பெருநாட்களிலும் இந்த தக்பீர் முழக்கங்களை தொடர்ந்து நீங்கள் கேட்கலாம்.
தஃப்ஸீர்
تفسير
குர்ஆன் விரிவுரை.குர்ஆன் விரிவுரை நூற்களுக்கும் தஃப்ஸீர் எனப்படும்.உலகில் இது வரை இரண்டு இலட்சம் தஃப்ஸீர்கள் வந்துள்ளன.குர்ஆனின் முதல் குர்அனின் முதல் விரிவுரையாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.உலகின் புகழ்பெற்ற தஃப்ஸீர் இப்னு ஜரீர் அத்தபரீ எழுதிய “தஃப்ஸீர் தபரீ” ஆகும்.
தவாஃப்
طواف
‘கஅபா’வை சுற்றுவது. ஏழு தடவைகள் சுற்றுவதன் மூலமே தவாப் என்னும் வணக்கம் நிறைவடைகிறது. (பார்க்க: 22:23)
தல்பியா
تلبية
ஹஜ் அல்லது உம்ரா செல்பவர்கள் இஹ்ராம் அணிந்த பின் கூறும் சிறப்பான ஒரு பிரார்த்தனைக்கு ‘தல்பியா’ (அடிபணிதல்) என்று கூறப்படும்.
தல்பியா: லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக்க ல(க்)க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த ல(க்)க வல்முல்கு லாஷரீக்க ல(க்)க.
நபி(ஸல்) அவர்கள் துல் ஹுலைஃபா என்ற இடத்தலமைந்த பள்ளிக் கருகில் வாகனம் எழுந்து நின்றதும் அதன் மேல் அமர்ந்து ” அல்லா ஹும்ம லப்பைக், லப்பைக்க லாஷரீக்க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத்த ல(க்)க, வல்முல்க் ல(க்)க, லஷரீக்க ல(க்)க. என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.அஹ்மத்)
தவ்ஹீத்
توحيد
ஏகத்துவம்.இறைனை ஒருமைப்படுத்துதல் என்பது பொருள். இறைவன் ஒருவனே என நம்புதல். உலகில் இஸ்லாம் மட்டுமே இறைவன் யார்? எப்படிப்பட்டவன் என்பதற்கு இலக்கணம் கூறியுள்ளது. அதாவது:-
“1) இறைவன் ஒருவனாக இருக்கவேண்டும்.2) அவன் எந்த தேவையு மற்றவனாக இருக்கவேணடும்.3) அவனுக்கு மனைவி மக்கள்,தாய் தந்தையர் இருக்கக் கூடாது.4) அவனுக்கு யாரும்,எதுவும் எந்த வகை யிலும் இணையாக இருக்கக்கூடாது” என்ற நான்கு அம்சங்களே இறைவனின் இலக்கணமாகும். (ஆதாரம் குர்ஆனின் 112 வது அத்தியாயம்)
தவ்ஹீதின் வகைகள்
அவை மூன்று வகைப்படும்.
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்.
1.தவ்ஹீதுர் ரூபூபிய்யா
படைத்தல், உணவளித்தல், காத்தல், உயிரளித்தல், மரணிக்கச் செய்தல் போன்ற அனைத்துச் செயல்களிலும் அல்லாஹ் தனித்தவன், எதிலும் எந்த வகையிலும் யாருக்கும் ஒப்புவமை இல்லாதவன் என மன மொழி மெய்களால் உறுதி கொள்வதற்கு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யா’ என்று சொல்லப்படும். இவையாவற்றிலும் அல்லாஹ் ஒருவனே தனித்துச் செயல்படுகிறான்.அவற்றில் யாருடைய உதவியும், துணையும், தலையீடும் இல்லை.
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ்ஜு, பிரார்த்தனைகள்,சத்;தியம் செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப்பலியிடுதல் போன்ற அனைத்து வகை வழிபாடுகளும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆற்றப்படவேண்டும என்று உறுதிப் படுத்துவதற்குப் பெயர் தான் ‘தவ்ஹீதுல் உலூஹிய்யா’ எனப்படும். (அதாவது : வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யப்படவேண்டும். )
3. ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’
அல்லாஹ்வின் அனைத்துத் திருநாமங்களையும், பண்புகளையும் அவனது மாண்புக்குப் பொருந்தும் வகையில் குர்ஆன்,ஹதீஸ்களில் கூறப்பட்டவாறு உறுதிப்பட நம்புவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத’ எனப்படுகிறது.
தஸ்பீஹ்
تسبيح
“சுப்ஹானல்லாஹ்”(அல்லாஹ் மிகத்தூய்மையானவன்), “அல்ஹம்து லில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹுக்கே உரியது), “அல்லாஹு அக்பர்”( அல்லாஹு மிகப் பெரியவன் என்று கூறுவது.
தஹ்லீல்
تحليل
‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் யாருமில்லை) என்று சொல்வது.
தஹாரத்
طهارة
தூய்மை என்பது பொருள். தஹாரத் என்ற சொல்லின் வினைச் சொல்லான “தஹர” என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த பல சொற்கள் 24 இடங்களில் குர்ஆனில் ஆளப்பட்டுள்ளன.
தூய்மை என்பது “உளத்தூய்மை,உடல் தூய்மை, உடைத்தூய்மை, இடத்தூய்மை,சொல் தூய்மை, செயல் தூய்மை,வணிகத்தூய்மை என பொருள் விரியும்.
நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் தூய்மை ஈமானில் பாதியாகும்.
(ஆதாரம் – அஹ்மது, திர்மிதீ, தாரமீ)
இஸ்லாம் தூய்மையை அடிப்படையாக கொண்ட வாழ்கை நெறியாகும். அது மனிதன் எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
மேலும் இஸ்லாம் ஆரோக்கிய வாழ்விற்கு களம் அமைக்கிறது. தூய்மைக்கு உயர்ந்த நிலையை வழங்கி, ஒவ்வொரு முஸ்லிமின் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என கட்டளை யிடுகின்றது. “அல்லாஹ் தூய்மையானவன் அவன் தூய்மையான வர்களையே விரும்புகிறான்” என்ற நபி மொழி ஒவ்வொரு மனிதனுடைய உள்ளம், உடை, உறைவிடம் சூழல், உழைப்பு, வாழ்க்கை அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது.
தொழுகைக்கு தூய்மை அவசியம் என கூறி அத்தொழுகை நிறைவேற ஒரு நிபந்தனையாக விதித்துள்ள இஸ்லாம் உடல் தூய்மையின்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதை பின்வரும் நபி மொழி மூலம் உறுதிபடுத்துகிறது.
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘தூய்மையற்றவனின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.(ஆதாரம்: முஸ்லிம், அஹ்மது, அபுதாவுது, திர்மிதீ, நசயீ,இப்னுமாஜா, தப்ரானீ)
மேலும் பாவங்கள் நீங்குவதற்கு, தூய்மையும் ஒரு காரணமாகும் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘ஒரு முஸ்லிம் ஒளுச் செய்யும் போது முகத்தை கழுவினால் அவனின் முகத்திருந்து அவன் கண்கள் மூலம் செய்த அனைத்து தவறுகளும் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறிவிடும். தன் கைகளை அவன் கழுவினால் கைகள் மூலம் செய்த குற்றங்கள் அனைத்தும் அவனது கைகளிலி ருந்து தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியேறிவிடும். அவன் தன் கால்களைக் கழுவினால் நடந்து செய்த தவறுகள் அனைத்தும் அவனின் கால்களிலிருந்து தண்ணீரின் இறுதிச் சொட்டுடன் வெளியே றிவிடும். இறுதியில் அவன் குற்றமற்றவனாக ஆவான்.
(ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஅத்தா)
மேலும், நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘ஒருவன் அழகிய முறையில் ஒளுச் செய்தால் அவனின் தவறுகள் நகக்கண்களிலிருந்து வெளியேறும் அளவுக்கு அவனின் உடம்பிலிருந்து வெளியேறிவிடும்.
(ஆதாரம்: முஸ்லிம், நசயீ)
தஷஹ்ஹுத்
تشهد
அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷஹது அன்ன முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் திருத்தூதர்ஆவார்கள்) என்று சாட்சி கூறுவது.
தாகூத்
அல்லாஹ்வைத்தவிர வணக்கப்படுபவைகள், பின்பற்றப் படுபவைகள் அனைத்தும் ‘தாகூத்’ ஆகும்.(2:256,257,4:51,4:60,4:76, 5:60,16:36,39:17)
தாகூத்களின் தலைவர்கள் ஐந்து பேர். அவர்கள் :-
1. அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஷைத்தான்.
2. தன்னை மற்றவர்கள் வணங்க அனுமதிப்பவன்.
3. அல்லாஹ்வுக்கு பதிலாக தன்னை அனைவரும் வணங்க வேண்டுமென மக்களை அழைப்பவன்.
4. மறைவானவற்றை அறியும் ஆற்றல் தனக்கிருப்பதாக வாதிப்பவன்.
5. அல்லாஹ்வின் சட்டங்களை வீசிஎறிந்து விட்டு ஏனைய சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்பவன்.
தாரிக்
تاريخ
வாழ்க்கை வரலாறு.
தாருல் ஹிஜ்ரா
دارالهجرة
ஹிஜ்ரத் சென்ற ஊர். மதீனாவில் முஸ்லிம்கள் குடியேறியதால் “குடியேற்ற நாடு” என்ற பொருளில் ‘தாருல் ஹிஜ்ரா’ என வழங்கப் படுகிறது.
தலாக்
طلاق
திருமணத்திற்குப்பின் ஒருபெண்ணை முறையாக மூன்று தடவை களாக மணவிடுதலை செய்வதற்குத் தலாக் எனப்படும். ஒரே வேளையில் “தலாக்க, தலாக், தலாக்” என்று கூறிவிடுவதால் ஒரு பெண் விவாக ரத்து செய்யப்பட்டவளாக ஆக முடியாது. இறைவன் அனுமதித்தவைகளில் அவனுக்குக் கோபமானது தலாக் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தாபிஃ
تابع
இஸ்லாத்தை ஏற்று நாயகத் தோழர்களை நேரிற் கண்டு முஸ்லிமாக மரணித்தவர்.
தாஸூஆ
تاسوعة
ஒன்பதாவது நாள். முஹர்ரம் மாதத்தின் 9-வது நாளுக்கு தாஸூஆ எனப்படும்.
திர்ஹம்
درهم
‘திர்ஹம்’ என்பது 3.62 கிராம் அளவுள்ள நாணயம். இது தங்க நாணயத் திற்கும், வெள்ளி நாணயத்திற்கும் கூறப்படுகிறது.அந்த காலத்தில் திர்ஹம் வெள்ளி நாணயத்திற்கும், தீனார் தங்க நாணயத்திற்கும் வழங்கப்பட்டு வந்தன. இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் அவர்களின் நாணயத்திற்கு “திர்ஹம்” என வழங்கப் படுகிறது.
தியத்
دية
‘தியத்’ என்றால் கொலை குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு சொல்லப்படும்.
தீனார்
دينار
அரபு நாட்டில் வழக்கிலிருந்த தங்க நாணயம்.இன்று குவைத் போன்ற நாடுகளில் தங்களின் நாணயத்திற்கு “தீனார்” என்று கூறுகின்றனர்.
துஆ
دعاء
நம் தேவைகளைக் கேட்பதற்கு “பிரார்த்தனை” எனப்படும். இது இறைவனுக்கு மட்டுமே செய்யும் வணக்கங்களில் மிக முக்கியமான தாகும். நிலையானவனும்,பிறப்பு இறப்பு இல்லாதவனுமாகிய இறைவனிடம் மட்டும் தான் பிரார்த்திக்க வேண்டும். அவனுடைய படைப்புகளான இறந்து போன மனிதர்கள்,மகான்கள்,அவ்லியாக் களிடம் நம் தேவைகளைக் கேட்கவே கூடாது.
பக்கா
بكة
மக்காவின் ஒரு பகுதி.ஆகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும்,பாக்கியம் பொருந்தியதாகவும்,அனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா)வில் உள்ளதாகும்.(3:96)
ஃபர்ள்
فرض
கடமை. கட்டாயம் செய்யப்படவேண்டிது.தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ’ஜு போன்ற கடமைகள்.
ஃபஜ்ர்
فجر
அதிகாலைக்கும், அதிகாலைத் தொழுகைக்கும் சொல்லப்படும்.
பஹீரா
بَحِيرَةٍ
காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்
அரபுகளின் கற்பனையான செயல்களையும்,மூடப்பழக்கங்களையும் பின் வரும் வசனம் (5:103) கண்டிக்கிறது.
مَا جَعَلَ اللّهُ مِن بَحِيرَةٍ وَلاَ سَآئِبَةٍ وَلاَ وَصِيلَةٍ وَلاَ حَامٍ وَلَـكِنَّ الَّذِينَ كَفَرُواْ يَفْتَرُونَ عَلَى اللّهِ الْكَذِبَ وَأَكْثَرُهُمْ لاَ يَعْقِلُونَ
‘பஹீரா’ (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ‘ஸாயிபா’ (சுயேட்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்),’வஸீலா’ (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங் களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்), ‘ஹாமி’ (வேலை யெதுவும் வாங்கப்படாமல் சுயேட்சையாகத் திரியும்படி விடப்படும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்த வில்லை.-ஆனால் காபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர்.மேலும் அவர்களில் பெரும்பாலும் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர். (அல் மாயிதா 5:103)
ஃபிக்ஹ்
فقه
மார்க்கச் சட்டம்
ஃபகீஹ்
فقيه
மார்க்கச்சட்ட அறிஞர். மார்க்கத்தில் அறியப்பட்ட இமாம் அபூஹனீபா (ரஹ்),இமாம் மாலிக்(ரஹ்),இமாம் ஷாபியீ (ரஹ்),இமாம் ஹபனல் (ரஹ்) போன்ற சட்ட மேதைகளுக்கு”.பகீஹ்” எனக் கூறப்படும்.இதன் பன்மை “புகஹா” (சட்ட மேதைகள்) எனப்படும்.
பனூ
بنو
ஒருவரின் குடும்பத்தார், வழி வந்தவர்கள்.
பனீ இஸ்ராயீல் ( பனூ இஸ்ராயீல்)
بني إسرائيل- بنو إسرائيل
இஸ்ராயீலின் சந்ததியினர் (இஸ்ராயீல் என்பது யஃகூப் நபியின் இன்னொருபெயர்.)
ஃபித்யா
فدية
‘ஃபித்யா’ என்றால் கைதியை விடுவிப்பதற்காக வழங்கப்படும் தொகை.
பைத்துல் மஃமூர்
بيت المعمور
இது ஏழாவது வானத்தில் கஃபத்துல்லாஹ்வுக்கு நேர் முகட்டில் மலக்குகள் அல்லாஹ்வை வணங்குவதற்காக அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இறை இல்லமாகும்.
பைஅத்
இஸ்லாமிய உடன்படிக்கை, ஒப்பந்தம் எனப் பொருள்படும்.
மக்ரூஹ்
مكروه
வெறுக்கத்தக்கது.அருவருக்கத்தது. மார்க்கத்தில் ஒன்றைச் செய்வது சரியல்ல என்பதற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
மக்கா
இப்றாஹீம் நபி, இறைவனின் உத்தரவின்படி மனைவி ஹாஜரையும், பச்சிளம் பாலகன் இஸமாயீலையும் பாலைவனத்தில் விட்டுவந்தார். இவ்விருவர் மூலமே மக்கா உருவானது.(14:37)
“மக்காவின் மையப்புகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்தபின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான்.(48:24)
மக்கீ
مكي
மக்காவைச் சார்ந்தவர். மக்காவில் அருளப்பட்ட இறைவசனங் களுக் கும் மக்கீ எனப்படும்.
மத்யன்
(7:85,9:70,11:84,11:95,20:40,22்44,28:22,23,45,29:36)
மதனீ
مدني
மதீனாவைச் சார்ந்தவர். மதீனூவில் அருளப்பட்ட இறைவசனங்களுக் கும் மதனீ எனப்படும்.
மதீனா(யத்ரிப்)
مدينة
ஸவூதி அரேபியாவிலுள்ள முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமிக்கு மதீனா என்றும்,மதீனத்துந்நபி (நபிநகர்) என்றும் அல்-மதீனத் துல் முனவ்வரா ( ஒளி நகர்) எனவும் பெயர் வழங்கப்படுகிறது. இதன் முந்தைய பெயர் “யத்ரிப்” என்பதாகும். ( 9:101,9:120,33:13,33:60,63:8)
மஸ்ஜித்
مسجد
தொழுமிடம், பள்ளிவாசல். பொதுவாக இறைவனை முஸ்லிமகள் வணங்குவதற்காக எழுப்பப்பட்டுள்ள எல்லா பள்ளிவாசல்களுக்கும் இப்பெயர் வழங்கப் படுகிறது. இதை தமிழகத்தில் (மஸ்ஜித் என்ற பெயர் மருவி) “மசூதி” என்றழைக்கின்றனர்.(மஸ்ஜிது என 21 தடவை கள் கூறப்பட்டுள்ளன)
மஸ்ஜிதுல் அக்ஸா
المسجدالأقصا
“அல் மஸ்ஜிதுல் அக்ஸா” (கோடியிலுள்ள பள்ளிவாசல் என்று இதை அழைப்பர்.இதற்கு “பைத்துல் மக்திஸ்” என்ற பெயரும் உண்டு. இது ஜெரூஸலத்தி லுள்ள புனிதப் பள்ளி வாசல். இதற்கு “தூய்மையான இல்லம்” என்று பொருள். வேதக்காரர்கள் இதை “ஹைக்கல்” என்பர். இது மூன்றாவது புனிதப் பள்ளிவாசல் ஆகும். ஜெரூஸலத்திற்கே ” பைத்துல் மக்திஸ்” அல்லது அல்குத்ஸ் என்று கூறுவதும் உண்டு.(17:1)
பைத்துல் முகத்தஸில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராம்,மஸ்ஜிதுந் நபவீ யில் தொழுவைத விட ஐந்நூறு மடங்கு மேலானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தப்ரானி)
மஸ்ஜிது குபா (மஸ்ஜிதுத் தக்வா)
مسجدقباء ، مسجد التقوي
இது குபா நகரில் உள்ள மஸ்ஜிதாகும். இதுவே இஸ்லாத்தில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல். இது தக்வா (இறையச்சத்தின்) அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள முதல் பள்ளிவாசல் என்று இறைவனே குர்ஆனில் அங்கீகாரமளித்துள்ளான.لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى (பார்க்க: 9:108)
மஸ்ஜிது ளிரார்
நயவஞ்சகர்கள் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தவும், தீமையை விளைவிக்கவும், ஏகத்துவத்தை தகர்க்கவும் ஒரு பள்ளி வாசலைக் கட்டினர். அதற்கு தொழுகை நடத்துவதற்காக நயவஞ் சகர்கள் நபிகள் நாயகத்தை வேண்டினர். இவர்களுடைய சதியை அம்பலப்படுத்தி இறைவன் 9: 107 வசனத்தை அருளியதும் நபி (ஸல்) அவர்கள் சில நாயகத் தோழர்களை அனுப்பி இடித்துத் தரை மட்டமாக்கினர்.
மஸ்ஜிதுந் நபவீ
مسجدالنبوي
பொதுவாகவே மதீனாவிலுள்ள நபியின் பள்ளி வாசலை “மஸ்ஜிதுந் நபவீ ” என்றழைக்கின்றனர். “இங்கு தொழுவது மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமைத்தவிரவுள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (ஆதாரம் புகாரி,முஸ்லிம்).இது நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபிறகு ஹிஜ்ரி 1-ல் கட்டிய பள்ளிவாசலாகும்.
மஸ்ஜிதுல் ஹராம்
المسجدالحرام
உலக முஸ்லிம்கள் கிபலாவாக முன்னோக்கித் தொழும் மக்கா விலுள்ள கஅபாவை உள்ளடக்கிய இறையில்லத்தை “மஸ்ஜிதுல் ஹராம்” (புனிதப் பள்ளி வாசல்) எனறு கூறுவர்.இது உலகின் முதலாவது புனிதப் பள்ளி வாசல் ஆகும். இதை “பைத்துல் ஹராம்” என்றும் கூறுவர். குர்ஆனில் இச்சொல் 15 தடவைகள் கூறப்பட்டுள்ளன. (பார்க்க 2:144,149,150,191,196,217, 5:2,8:34,9:7,19,28. 17:1,22:25,48:25,27.
“மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு தொழுகை ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் தொழுகையை விட ஓரிலட்சம் தொழுகையைவிடமேலானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) ஆதாரம்: அஹ்மத்
மஹர்
مهر
மணமகன், மணமகளுக்கு கொடுக்க வேண்டிய திருமணக் கொடை. இதற்கு ஒரு அளவு இல்லை. வசதிக்குத் தக்கவாறு ஒரு இரும்பு மோதிரத்திலிருந்து ஒரு தங்கக்குவியல் வரை கொடுக்கலாம்.நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்கு 500 திர்ஹங்கள் வரை கொடுத்துள்ளனர்.
மாஷா அல்லாஹ்!
அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதைக் குறிக்கவே “மாஷா அல்லாஹ்” எனக் கூறப்படும். (பார்க்க: 6 :128,7:188, 10:49,18:39,87:7)

மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கேள்வியுறும்போதோ,வியப்புக்குரிய ஒன்றை செவியுறும்போதோ,ஒருவரின் திறமையை அல்லது சாதனையைப் பாராட்டும் போதோ “மாஷா அல்லாஹ் “என்றோ, ” மாஷா அல்லர்லாஹ் லா குவ்வத்த இல்லா பில்லாஹ் “ என்றோ கூறப்படும்.
மிஃராஜ்
معراج
‘மிஃராஜ்’ என்பது நபி (ஸல்) அவர்கள் சென்ற வானுலகப் பயணத்தைக் குறிக்கும்.இது குறித்து குர்அனில்17வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முதல் வசனமாகப் பேசப்படுகிறது.இது கனவில் அல்லஉடல் ரீதியான பயணம் என்பதை “அஸ்ரா பி அப்திஹி லைலன்” “தனது அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றான்”என்ற வசனம் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது. (17:1)
“மிஃராஜ்” இதன் பொருள் உயருதல் என்பதாகும். நபி (ஸல்)செய்த விண்ணேற்றததைக் குறிக்க இச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
இப்யணம் துவங்கியது நபித்துவத்திற்குப் பன் 11.5 ஆண்டுகளுக்குப் பின் உம்முஹானி அவர்களின் இல்லத்திலிருந்து என்று சிலரும், 12 ஆண்டுகளக்குப்பின் ஹத்தீம் என் இடத்திலிருந்து என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இது ஹிஜ்ரத்துக்கு ஓராண்டுக்கு முன் நிகழ்ந்தது என்றும் , ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்தது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுவதாக “சீரத்துந்நபி” வரலாற்றில் காணப்படுகிறது்.
இது ஓர் ஆன்மீகப்பயணம் என்று என்று ஆயிஷா(ரலி),முஆவியா (ரலி) ஆகியோர் கூறுகின்றனர். இந்த பயணத்தின் போது தான் ஐவேளைத் தொழுகை விதியாக்கப்பட்டது.
மின்ஜனீக்
منجنيك
‘மின்ஜனீக்’ என்பது அக்காலத்தில் பயன்புடுத்திய போர் கருவி.
மினார்- (மினார)
منار
கோபுரம், பள்ளிவாசல் கோபுரத்திற்கு மினார்,மினாரா என வழங்கப்படுகிறது.
மிஸ்ர்(எகிப்து)
எகிப்து நாட்டைக்கு குறிக்கும் மிஸ்ர் என்ற சொல் குர்ஆனில் நான்கு இடங்களில் வருகின்றன. (பார்க்க-10:87,12:21,12:99,43:51)
மிஹ்ராப்
محراب
பள்ளிவாசல்களில் இமாமின் ஒலியை பின்னாலுள்ளவர்கள் கேட்பதற்காக குடுவையாக கட்டப்பட்ட வளைவுச் சுவர்.இது உமர்(ரலி) அவர்களின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். இன்று வரை எல்லாப் பள்ளிவாசல்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.(இச்சொல் குர்ஆனில் 4 தடவைகள வருகின்றன.3:37,39,19:11,38:21)
மீக்காத்
ميفات
ஹஜ்ஜுஉம்ராக்குப் புறப்படுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட எல்லை. 1)”யலம்லம்”( இந்தியர்களுக்கு) மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலை.இது மக்காவிலிருந்து 54 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. 2) துல்ஹுலைபா (மதீனா பகுதி மக்களுக்கு) மதீனாவிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவிலும் மக்கா விலிருந்து தெற்கே 450 கி.மீட்டர் தொலைவும் உள்ளது 3) ஜுஹ்ஃபா -மக்காவுக்கு வடக்கே187 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.(இது யான்பு, எகிப்பு, சிரியா, ஜோர்டான் மக்களுக்குரிய எல்லை.)4. கர்னுல் மனாஸில். இது மக்காவுக்கு கிழக்கே உள்ள ஒரு மலை.மக்காவிலிருந்து 94 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.