Feed on
Posts
Comments

‘திருமண வாழ்த்து’
என்ற பெயரால்…

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல் வாழ்க’ என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.

ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரிஸா வஇப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா … இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள். மேலும்.. »

ஈதுல்ஃபித்ர் -ஃபித்ருப் பெருநாள்.1.

1) நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதீ)

2) பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி மேலும்.. »

1) முஸ்லிமான ஆண்இ பெண் பெரியவர் சிறியவர் அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக’ கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியுள்ளார்கள். மேலும் இத்தர்மத்தைஇ பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரிஇ முஸ்லிம்)

2) நோன்பில் நpகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அபூதாவூத்இ நஸயீ)

4) நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி ‘தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது.

இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ‘தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்.

‘ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!

சட்டங்கள்:

கடமை
இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியயோர் பெரியயோர் ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பீன் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.

ஃபிதர் ஸகாத்தின்அளவு
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு ”முத்து’ எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ”ஸாவு’ எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும். எனினும் மார்க்க மேதைகள் 2 கிலோ.40 கிராம் எடை என வகுத்துள்ளனர்.

ஃபித்ரா கொடுக்கும் நாள்
இத்தர்மத்தைஇ பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.என இப்னு உமர்(ரலி) கூறியதாக இமாம் நாஃபிஹ் (ரஹ்) அறிவிக்கிறார்கள்

இஸ்லாமிய உலகம் வற்றாத உவகையுடன் வரவேற்றுச்சிறப்பிக்கும் அரிய திங்கள் புனித ரமளான் மாதம் ஆகும்.

‘ரமளான்’ என்ற அரபுச்சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. சுட்டெரித்தல் என்பது அதன் சிறப்பான பொருளாகும். ரமளான் நோன்பு மனிதனின் தீய பழக்கவழக்கங்களை சுட்டெரித்து அவனைப் புனிதனாக்குகிறது. அவன் புடம்போட்ட பொன்னாக மாறுகிறான்.தீய பழக்கவழக்கங்களையும் பாவங்களையும் சுட்டெரிப்பதால் இம்மாதத்திற்கு இப்பெயர் ஏறபட்டது.
ரமளான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.எழில்மிகு இஸ்லாமிய அடித்தளத்திற்கு வலிமையூட்டுவதில் நோன்புக்கு பெரும் பங்குண்டு. உள்ளத்தையும் உடலையும் ஒருசேரத் தூய்மையாக்கும் பேராற்றல் இஸ்லாமியர் கடைபிடிக்கும் நோன்புக்கு மட்டுமே உள்ளது என்பதை அறிவியல் அறிஞர்களும், உளவியல் ஆய்வாளர்களும் மருத்துவ மேதைகளும் ஒருமித்துக்கூறுகின்றனர் இறைவன் கடமையாக்கிய நோன்பின் மாண்பையும், வள்ளல் நபி(ஸல்) கடைபிடித்துவந்த நோன்பின் பக்குவ நிலையையும் இன்று உலகம் முழுவதும் உணரத் தொடங்கிவிட்டது. எனவே தான் முஸ்லிம்களுடன் வாழும் மாற்று மத சகோதரர்களும் அதன் அருமை பெருமையை உணர்ந்து நோன்பு நோற்கத் துவங்கிவிட்டனர்.

நோன்பு எல்லா சமூகத்தாருக்கும்
விதியாக்கப்பட்ட கடமை

நோன்பு என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கடமையல்ல. இதற்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தாருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்களும் பண்டு தொட்டு நோன்பிருந்து வந்ததை அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டவாறே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம் (2:183)

இறை தூதர்கள் யாவரும் நோன்பிருந்தனர்.

நபி நூஹ் (அலை) அவர்கள்,  ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா ஆகிய இரு நாட்களைத்தவிர ஆண்டு முழுவதும் நோன்பு நோற்று வந்துள்ளனர். நபி தாவூது (அலை) வருடத்தில் பாதி நாட்கள் (அதாவது ஒருநாள் விட்டு ஒருநாள்) நோன்பு நோற்று வந்து்ள்ளனர். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் மாதத்தில் 13,14,15 ஆகிய மூன்று நாடகள் நோன்பிருந்து வந்துள்ளனர். நபி மூஸா (அலை) அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் நோன்பு நோன்பு நோற்று வந்துள்ளனர். என்பதிலிந்து முன் வாழ்ந்த இறைதூதர்கள் யாவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டு அவர்கள் நோன்பிருந்து வந்ததை அறிய முடிகிறது.

நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது?

இஸ்லாம் தோன்றிய உடனேயேநோன்பு மக்களுக்கு கடமையாக்கப்படவில்லை. இஸ்லாமிய ஏகத்துவத்தின் மீதும்,குர்ஆன் காட்டும் வழியின்மீதும் இறைவணக்கத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையும் உறுதிப்பாடும் ஏற்பட்ட பின்னர் தான் இறைவன் மேற்கூறிய 2:183 வது வசனத்தை அருளி நோன்பைக் கடமையாக்கினான். நோன்பு ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு மத்தியில் விதியாக்கப்படடது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 9 ஆண்டுகள் நோன்பிருந்து வந்தனர். அவர்களைப்பின்பற்றி உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் கடந்த 1425 ஆண்டு காலமாக விடாது நோன்பிருந்து வருகின்றனர். இதன் மாண்பினை உணர்ந்து ஏனைய மதத்தினர் எவரும் கடைபிடிக்காத இந்த நோன்பினை கடமையோடும் கட்டுப்பாடோடும் உலகின் ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு நோற்பது உலகோரை வியப்பிலர்ழ்ததி வருகிறது.

உலக அமைதிக்கு உயர்ந்த வழி

இன்றைய உலகில் ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் மற்றொரு சாரார் தாழ்ந்த நிலையிலும் இருப்பதைக் காணுகிறோம்.இன்றைய உலக அமைதியின்மைக்கு இதுவே முக்கியக் காரணமாகும். இதனால் தான் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு ஒருவனை மற்றொருவன் அபகரிக்கிறான்;. ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கிறது. உலகில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதியின்மை நிலவுகிறது. வறுமை என்னும் ஒன்று இல்லையெனில் உயர்வும் தாழ்வும் இல்லை. வறுமையின் கொடுமையை நோன்பின் மூலம் தான் உணர முடியும். பசியால் துன்புறும் ஒருவனுக்குத்தான் பசியின் கொடுமையை உணர இயலும். எனவே இல்லாருக்கு உள்ளோர் உதவி செய்யநோன்பு தூண்டுகிறது.இம்மாதத்தில் செல்வந்தர்கள், இல்லாத ஏழைகளுக்கு அள்ளி அள்ளி வழங்குவதையும் நோன்பாளிக்கு வயிறார உணவளித்து மகிழ்வதையும் உலகெங்கணும் காணமுடிகிறது. இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பையும், அது உணர்த்தும் ஸகாத் என்னும் ஏழைவரியையும், ஸதகா என்னும் தர்மங்களையும் உலகம் பேணி நடந்தால் எங்கும் அமைதி நிலவும்.

நோன்பும் விஞ்ஞானமும்

உள்ளத்தை மட்டும் நோன்பு புனிதமாக்கவில்லை. உடலையும் அது சுத்தம் செய்கிறது. மனித உடலுக்குள் இருக்கும் வயிறு, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புக்கள் ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு ஓய்வு மிகவும் அவசியம். அப்பொழுது தான் உடல் நலம் பெறும். இதற்கு சிறந்த வழி நோன்பு நோற்பது தான். முப்பது நாட்கள் நோன்பிருக்கும் மனிதனின் உள்ளுறுப்புக்கள் ஓய்வு பெற்றுச் சுத்தம் அடைகின்றன. பலவித நோய்களும் அவனைவிட்டும் நீங்குகின்றன. ‘நீரிழிவைத் தவிர்ப்பதற்கு நோன்பு சிறந்த ஒன்றாகும்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.அண்மையில் ரஷ்ய நாட்டின் ரோசிரியர் ஒரு பெரும் உண்மையைத் தமது ஆராய்ச்சியின் மூலம் வெளியிட்டுள்ளார்.’ஓவ்வொரு ஆண்டும் ஒரு மனிதன் முஸ்லிம்களைப் போல் நோன்பு நோற்றால் அவன் ஆயுள் அதிகரிக்கிறது’. இதைப்போலவே அல்சர் நோயினால் அவதிப்படுவோர் ‘இந்த நோன்பினைக் கடைபிடித்தால் நூறு சதவிகிதம் குணமடைந்து விடுவதாக’ அமெரிக்க விஞ்ஞானி ஒருவரும் கூறியிருப்பது நோன்பின் மாணபினைக்காட்டுகிறது.

எனவே ‘சர்க்கரை வியாதியினால் நலிவோரும் , அல்சரினால் அவதிப்படுவோரும் நோன்பைக் கடைபிடித்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.’

நோன்பும் உளவியலும்

உளவியல் அடிப்படையிலும் நோன்பு உயர்ந்த இடத்தையே வகிக்கிறது. பெரும்பாலான நம் பண்புகள் பழக்கத்தால் வருவன. ‘எறும்பூரக்கல்லும் தேயும் என்பர்’ தமிழ் நாட்டினர்.இது உண்மையே! ஒரு செயலை நாம் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாகி விடுகிறது என்று உள நூல் அறிஞர்கள் உரைக்கின்றனர். விரலை வாயில் வைத்துச்சப்பும் குழந்தை நாளடைவில் அதைப்பழக்கமாக்கிக் கொள்கிறது. அந்தப் பழக்கத்தைப் போக்க பெற்றோர் அரும்பாடு படுகின்றனர்.நோன்பு நோற்கும் ஒருவன். தான் சொல்லும் சொல்லில் உண்மையையே பேசிப்பழகுகிறான்.செய்யும் செயல்களிலும் நன்மையையே இணைத்துப்பழகுகிறான். முப்புது நாட்கள் நோன்பிருக்கும் அவனிடம் நல்ல பழக்க வழக்கங்கள் அமைகின்றன. அவன் பண்புள்ளவனாக மாறுகிறான்.

நோன்பின் வாயிலாக இத்துணைச்சிறப்புகளையும் மனிதன் பெறுகிறான். அதனால் தான் ரமளான் மாதத்தில் தன் அடியார்கள் நோன்பு நோற்க வேண்டுமென இறைவன் பின்வருமாறு கட்டளையிடுகிறான்.

فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
‘உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும்’.(2:185)

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சி பகர்வது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத் கொடுப்பது, இறை இல்லத்தைத் தரிசிப்பது (ஹஜ் செய்வது) ரமளான் மாதம் நோன்பு நோற்பது.(புகாரி)

‘ஸவ்மு’-தடுத்துக்கொள்ளல்.

நோன்பென்பது அல்லாஹ்வின் பால் நெருங்கும் எண்ணத்துடன்-நிய்யத்துடன்- உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அதிகாலை-பஜ்ரு- உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை தன்னைத் தடுத்துக் கொள்வதாகும். எனவே தான் நோன்பு என்னும் ஸவ்முக்கு- “அல்இம்ஸாக்” சாதாரண காலத்தில் ஆகுமாக்கப்பட்டதைக்கூட தடுத்துக்கொள்வதால் ‘தடுத்துக்கொளளுதல’ என்ற பெயர் ஏற்பட்டது.

யார் மீது கடமை?

இது புத்தி சுவாதீனமுள்ள, பருவ வயதை அடைந்த முஸ்லிமான ஓவ்வொரு ஆண்,பெண்ணும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வணக்கமாகும்.. பருவ வயதை அடைவதென்பது, பதினைந்து வயதை அடைவது அல்லது மறை விடத்தில் உரோமம் முளைப்பது அல்லது கனவில் இந்திரியம் வெளிப்படுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. பெண்ணுக்கு இன்னும் ஒருபடி அதிகமாக மாதவிடாய் ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. எனவே ஒரு சிறுவனுக்குஅல்லது சிறுமிக்கு இவற்றில் யாதேனும் ஒன்று ஏற்பட்டுவிட்டால் அவன்-அல்லது அவள் பருவ வயதை அடைந்தவராக கருதப்படுவார்..

ரமளானின் மாண்புகள்

இந்த ரமளான் மாதத்தில் தான் வேதங்கள், ஆகமங்கள்(ஸுஹ்ஃபுகள்) யாவும் அருளப்பட்டுள்ளன. நபி இப்றாஹீம் (அலை)அவர்களுக்கு ஸுஹ்ஃபுகள்-ஆகமங்கள்- ரமளான்பிறை ஒன்றிலும்,நபி மூஸா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத’ வேதம் ரமளான் பிறை ஆறிலும், நபி தாவூத (அலை) அவர்களுக்கு ‘ஸபூர்’ வேதம் ரமளான் பிறை பன்னிரண்டிலும், நபி ஈஸா (அலை) அவர்களுக்கு ‘இஞ்சீல’ வேதம் ரமளான் பிறை பதினெட்டிலும், நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ‘குர்ஆன்’ வேதம் ரமளானின் ‘லைலத்துல் கத்ர்’ இரவிலும் அருளப்பட்டன.

இம்மாதத்தில் தான் அல்லாஹ் அபரிமிதமான நற்கூலிகளை வழங்குகிறான். ஏராளமான அருட்கொடைகளை அடியார்கள் மீது பொழிகிறான்.
இது நன்மைகளை நல்கி அருட்கொடைகளை அள்ளி வழங்கும் புனித மாதம்! வெகுமதிகளையும், அன்பளிப்புகளையும் வாரிவாரி வழங்கும் ஏற்றமிகு மாதம்!!
இந்த மாதத்தின் மகிமையை இறைவனே தனது திருமறையில் புகழ்ந்து பேசுகிறான்:

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ

ரமளான் மாதம் எத்தகைய(மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், நன்மை தீமைகளை பிரித்தறிவக்கக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன்(என்னும் இவ்வேதம்)அருளப்பெற்றது…… ஆகவே யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (2:185)

இறைவனின் ஆணையைச் சிரமேற்தாங்கி முப்பது நாட்கள் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் அதன் மாண்பைப் பெறுகின்றனர்.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :
‘இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.’மறுமை நாளில் நோன்பாளிக்காக அவனது நோன்பு சிபாரிசு செய்யும்.அன்று அவர் மகிழ்வுடன் அல்லாஹ்வை சந்திப்பார். சொர்கத்தின் எட்டுவாயில்களில் ‘ரய்யான்’ என்னும் வாசலும் ஒன்று.அதில் நோன்பாளிகளட மட்டுமே நுழைவார்கள்.
மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்பப்படுகின்றன. மேலும், சைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. (நூல் : புகாரி )

இம்மாதத்தில் ‘சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுன்றன’ என்றால் ‘நல்லமல்கள் பெருகுவதற்கும் , அமல்கள் செய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்கும் தான்!’
அவ்வாறே ‘நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன’ என்றால் – இறைநம்பிக்கையாளர்களுடைய பாவங்கள் குறைவதற்காகவும், தீய செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும் தான்!

சைத்தான்கள் விலங்கிட்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்படுகிறார்கள்’ என்றால் சைத்தானின் தீய செயல்களிலிருந்து மாதம் முழுவதும் விலகி ஐம்புலன்களையும் அடக்கி ஆன்மீகப் பரிபக்குவத்தைப் பெற்று பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்காகத்தான்.! இம்மாதத்தில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெறும் சிறந்த பயிற்சி ஏனைய மாதங்களிலும் தீமைகள் புரியாது மக்களைக் காத்து ஆண்டுமுழுவதும் தூய வாழ்வு வாழ துணை புரிகிறது. 

                                         
ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ‘நன்மை செய்பவர்களே! (நன்மை செய்ய)முன் வாருங்கள். பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!’ என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)

வல்ல நாயன் ;அல்லாஹ் ரமளான் மாதத்திற்கு ஏனைய மாதங்களிற்கில்லாத பல சிறப்பம்சங்களை வழங்கியுள்ளான்.அவற்றுள் சில:-

1. நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு. அது இறை நெருக்கத்தை அதிகரிக்கிறது.
2. நோன்பு இறை நினைவை ஏற்படுத்துகிறது
4. மனதைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கிறது
6. ஷைத்தானின் ஊசலாட்டங்களை கட்டுப்படுத்கிறது.
7. உடல் நலனைப் பேணுகிறது
8. பாவத்திற்கு பரிகரமாகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஐங்காலத் தொழுகைகளும், ஒரு ஜும்ஆ தொழுகையிலிருந்து மறு ஜும்ஆத் தொழுகை வரை, ஒரு ரமளான் முதல் மறு ரமளான் வரை- பெரிய பாவங்களைத் தவிர்த்து சிறு பாவங்களுக்கு பரிகாரமாகும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
9. நோன்பாளியின் துஆ மறுக்கப்படுவதில்லை.இறைவனால்அங்கீகரிக்கப்படும்.
நிச்சயமாக நோன்பாளி நோன்புதிறக்கும் வேளையில் கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ( ஸுனனு இப்னு மாஜா)
மூன்று பேரின் துஆ இறைவனால் ஏற்கப்படும். 1. நோன்பாளியின் துஆ 2. அநீதம
செய்யப்பட்டவனின் துஆ. 3. பயணியன் துஆ. (பைஹகீ)
10. முந்தைய பாவங்கள் மன்னிக்கடுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:” யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)).

11. ஐந்து அருட்கொடைகள்
நபி (ஸல்) கூறியுள்ளார்கள்:-
வேறு எந்த சமுதாயத்தவருக்கும் கொடுக்கப்படாத ஐந்து சிறப்புக்கள் எனது சமுதாயத்தவருக்குக் கொழுக்கப்பட்டுள்ன..

1. நோன்பாளியின் வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை உடையதாக இருக்கும்.
2. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவர்களுக்காக மலக்குகள்
பாவமன்னிப்புத் தேடுகின்னர்.
3. அல்லாஹ் தனது சுவர்க்கத்தை ஒவ்வொரு நாளும் அழகுபடுத்துகிறான். எனது
நல்லடியார்கள் தம் துன்பங்களையும், சிரமங்களையும் தாங்கிக் கொண்டு
உன்னிடம் வர இருக்கிறார்கள் என அதை நோக்கிக் கூறுகிறான்.
4. மூர்க்கத்தனமான சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
5. ரமளானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
என்று நபிகளார் கூறியதும் அது லைலத்துல் கத்ருடைய இரவா? எனக்
கேட்கப்பட்டது. இல்லை. வேலைசெயதவருக்குரிய கூலி அவரது வேலை முடிந்த
பிறகு தானே வழங்கப்படுகிறது என்றார்கள் நபிகளார்(ஸல்)
(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத், பஸ்ஸார்.)
மேலும் அதன் மாண்புகளாவன:-
12. ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான மகத்துவமிக்க இரவு இதில் உள்ளது.
13.. ரமளானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரக விடுதலை வழங்குகிறான்.
14. ரமளானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்குச் சமமாகும்.
15. பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மகன் செய்கின்ற எல்லா நற்செயல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு
மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகி றான்: நோன்பைத்தவிர.ஏனெனில் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்.(இப்னுமாஜா)
.
ரமளான் மாதத்தில் செய்யவேண்டிய 8 வணக்கங்கள்-அமல்கள்
(நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்)

1. தூய்மையான நோன்பு

‘இறை நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பர்த்து ரமளானில் நோன்பு நோற்பவரின்
முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ( புகாரி, முஸ்லிம்)
வெறுமனே உண்ணாமல் பருகாமல் இருப்பதன் மூலம் மடடும் இந்த நன்மையை
ஒரு நோன்பாளி அடைந்து விடமுடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்:-
‘பொய் பேசுவதையும், போலியான செயல்களையும் ஒரு நோன்பாளி
விடவில்லையெனில் அவன் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பமாலும் இறைவனுக்கு எந்த தேவையுமில்லை. (புகாரி)

‘இறை நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பர்த்து ரமளானில் நோன்பு நோற்பவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ( புகாரி, முஸ்லிம்)வெறுமனே உண்ணாமல் பருகாமல் இருப்பதன் மூலம் மடடும் இந்த நன்மையைஒரு நோன்பாளி அடைந்து விடமுடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:-’பொய் பேசுவதையும், போலியான செயல்களையும் ஒரு நோன்பாளிவிடவில்லையெனில் அவன் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பமாலும் இறைவனுக்கு எந்த தேவையுமில்லை. (புகாரி)மேலும் இரத்தினச்சுருக்கமாகக் கூறினார்கள் :-
‘நோன்பு ஒரு கேடயம்’ என்று. (புகாரி, முஸ்லிம்)

1. நோன்பு தன்னடக்கத்தை மனிதனுக்கு பயிற்றுவிக்கிறது.
2. ஆணவத்தையும் அகந்தையைம் அழிக்கிறது.
3. செல்வச் செருக்கை போக்குகிறது
4. இச்சைகளுக்காளாமல் காப்பாற்றுகிறது.
5. வீண்பேச்சுகளிலும் சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடுவதைத்தடுக்கிறது.
6. அருவருப்பான காட்சிகளைக் காண்பதிலிருந்து கண்களை காக்கிறது.
7. பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல்ஆகியவற்றைவிட்டும் நாவைத் தடுக்கிறது.
8. ஆகாத பேச்சுகளையும், பாட்டுகளையும் கேட்பதிலிருந்து காதுகளை தடுக்கிறது.
9. தீயவை செய்வதைவிட்டும் கைகளைத் தடுக்கிறது.
10. தீமைபயக்கும் இடங்கள், விபச்சார விடுதிகள், மதுபானக்கடைகள், திரையரங்குகள், செல்தைவிட்டும் கால்களைத் தடுக்கிறது.

இவ்வாறு அனைத்து உறுப்புகளையும் தீமை செய்வதைவிட்டும் தடுக்கிறது. சுருங்கச்சொல்லின் நரகத்தின் நெருப்பிலிருந்து மனிதனைக்காக்குகிறது.. குறிக்கோளில்லாதோருக்கு நோன்பு பசியும் பட்டினியுமேயன்றி வேறில்லை.

‘எத்னையோ பேர் நோன்பிருக்கின்றனர். அவர்கள் பசியையும்,தாகத்தையும் தவிர எதையும் உணருவதில்லை. என்ற நபி பெருமானாரின் அரிய வாக்கு மிகவும சிந்தனைக் குரியதாகும்..

‘போலித்தனமான வாழக்கை கூடாது’ என்பதை இந்த நபி மொழி நமக்குப்
போதிக்கிறது.

ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத்தவிர. ஏனெனில் நோன்பு எனக்கே உரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்.(இப்னுமாஜா)
எல்லா வணக்கங்களுக்கும் இறைவன் தானே கூலி கொடுக்கிறான்.இருப்பினும் இந்தநோன்iபுக்கு மட்டும் ‘நானே கூலி கொடுப்பேன்’என வித்தியாசப்படத்தி கூறுவதேன்?

காரணம்,தொழுகை, நோன்பு,ஹஜ்ஜு போன்ற கடமைகள் நிறைவேற்றப்படும் போது புலப்படுகிறது. நோன்பு மட்டும் பிறரின் பார்வையிலிருந்து
தடுகப்படுகிறது. ஒருவன் பிறர் கண்களில் படாமல் இரகசியமாக உணவை
உட்கொண்டானா?,நீரைப் பருகினானா? என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
ஆதலால் நோன்பை மட்டும் சிறப்பித்து அதற்கு ‘நானே கூலி கொடுப்பேன்’என
இறைவன் பாகுபடத்தி கூறுவது இங்கு சிந்திக்கதாகும்.

2. இரவுத்தொழுகை (கியாமுல்லைல்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமளானின் இரவு நேரத்
தொழுகையை நிறைவேற்றுபவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.( புகாரி,முஸ்லிம்)
இரவுத் தொழுகை ரமளானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக
இருந்தாலும் ரமளானில் அது முக்கியத்தைப் பெறுகிறது.

‘ரமளானிலும், ரமளானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்)
அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை.’ என அன்னை
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ((புகாரி)

3. தருமம்.(ஸதகா) செய்தல்
நபி(ஸல) அவர்கள் காற்றைவிட வேகமாக தர்மம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும் தர்மமே மேலான தர்மம் என்றும் கூறினார்கள்.(திர்மிதி)

தர்மத்தால் ஒரு நோன்புக்கு இரு நோன்பு வைத்த பலன்!

ஒரு நோன்புக்கு இரு நோன்பு வைத்த பலனைப் பெறவேண்டுமா? ஒரு ரமளானுக்கு இரு ரமளானுடைய நன்மையைப் பெறவேண்டுமா? ரமளானில் தாராளமாக அள்ளி வழங்குங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

ஒருவருக்கு (இஃப்தார்) நோன்பு திறக்க உணவளித்தால் உணவளித்தவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும்.அந்தக் கூலியில் சிறிதும் குறைக்கப்படமாட்டாது. ( அஹ்மத்,திர்மிதி)

தர்மத்தை பணமாகவோ,உணவாகவோ வழங்கலாம். ‘நோன்பாளிக்கு இஃப்தார் வழங்குவது தர்மத்தில் மிகவும் உயர்வானதாகும’

4.குர்ஆன் ஓதுதல்

திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யவேண்டும். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது சிறப்பிற்குரியதாகும்..

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனை ஒரு தடவை ஓதிக்காட்டுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த ஆண்டில் (மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்துவதற்காகவும்) இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள்.
குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடிய வர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி – தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான். (முஸ்லிம்)

நல்லோர்களான நம்முன்னோர்கள் (ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்) ரமளான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

5. இஃதிகாஃப் இருப்பது

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (பள்ளிவாசலில் தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த ஆண்டில் ரமளானின் கடைசி இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். எனவே லைலத்துல் கத்ரு என்னும் கண்ணியமிக்க இரவைப்பெறுவதற்கு இந்த இஃதிகாஃப் மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

6. உம்ரா செய்வது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ரமளானில் நிறைவேற்றப்படும் ஒரு உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். மற்றொரு அறிவிப்பில் ‘ரமளானில் உமராவை நிறைவேற்றியவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றவராவார்’. (புகாரி ,முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரு இரவை அடைய முயலுதல்.
லைலத்துல்கத்ர் என்னும் மாண்பார் இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறப்பிற்குரியது. (97:3) அதாவது 83 வருடங்களும் 4 மாதங்களும் செய்யும் அமல்ளைவிட மிகவும் மாண்புடையதாகும்.
‘ரமளானின் கடைசிப்பத்து இரவுகளில் ஒற்றைப்படையாக உள்ள இரவில் லைலத்துல கத்ர் இரவைத் தேடுங்கள்’ (புகாரி முஸ்லிம்)

நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் லைத்துல் கத்ருடைய இரவில் நின்று வணங்குபவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரி,முஸ்லிம்)என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள:- நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அதிகமாக வணக்கத்தில் ஈடுவடுவார்கள்.ஏனைய மாதங்களில் இந்த அளவு ஈடுபடுவதில்லை. (முஸ்லிம்)

மேலும் அறிவிக்கிறார்கள்:-
நபி(ஸல்) ரமளானின் கடைசிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் தமது கச்சையைக் கட்டிக்கொண்டு அவற்றின் இரவுகளில் வழித்திருந்து வணக்கம் புரிவார்கள். தமது குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள். (புகாரி முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் வெளியே வந்தேன். இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டதன் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நன்மையாக இருக்கக் கூடும் என்றார்கள்.
ஆகவே அதை இருபத்து ஒன்று, இருபத்து மூன்று, இருபத்து ஐந்து, இருபத்து ஏழு, இருபத்து ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அடைந்தால் அதில் என்ன ஓதவேண்டும் என்று கேட்டேன். அதற்கு பின்வரும் துஆவை ஓதுமாறு நபியவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புவனாக இருக்கின்றாய்.எனவே  என்னை மன்னிப்பாயாக.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ

8. பாவமன்னிப்புக் கோருதல் ( அல்இஸ்திக்ஃபார்)
நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது. என நபி(ஸல்) கூறினார்கள். ( )

மூவரின் துஆக்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படும்.1. நோன்பாளியின் துஆ. 2. அநீதம் செய்யப்பட்டவரின் பிரார்த்தனை.3. பயணம் செயபவரின் வேண்டுதல். (பைஹகீ)
9. மேலும் ஸஹர் (நள்ளிரவு)நேரத்தில் பாவமன்னிப்புக் கோருதல் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ( பார்க்க குர்ஆன் 51:18)
‘யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்’ என ஜிப்ரயீல்(அலை) அவர்கள் (மூன்று முறைகள்) பிரார்த்தனை செய்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள்.

இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும;பாவமன்னிப்பையும் நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக.

குறிப்பு :
1. அனுமதிக்கப்பட்டவை

நோன்பாளிக்கு கீழ்கண்டவை குர்ஆன், சுன்னா அடிப்படையில்
அனுமதிக்கப்பட்டுள்ளன.
1. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமளான் இரவுகளில் உடலுறவு கொண்டபின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமளான் நோன்பை நோற்பார்கள். என ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி,முஸ்லிம்)
2. பல் துலக்குவதில் ரமளான், ரமளான் அல்லாத காலங்கள் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் நோன்பு நோற்கும் காலங்களில் பல துலக்குவதில தவறில்லை.
3. உளுவின் போது வாய்கொப்பளிப்பதிலும்,நாசிக்குத்தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே புகாதவாறு எச்சரிக்கையாக இருப்பது அவசிமாகும். (பார்க்க: அபூதாவூது)
4. இரத்த தானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண்காதுக்கு சொட்டு மருந்து விடுதல்,எச்சில் விழுங்குதல்,தொண்டைக்குள் சென்றுவிடாதவாறு உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல்,பகல் வேளையில் குளித்தல்,தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் போன்றவைகள் நோன்பை முறித்துவிடாது.
5. முடிந்தவரை ரமளான் காலங்களில் பேணுதலுடனிருப்பது ஏற்புடையதாகும்.

2. அனுமதிக்கப்படாதவை :-
உண்ணுதல்,பருகுதல், தாம்பத்திய உறவு கொள்ளுதல் ஆகிய மூன்றும்
நோன்பை முறிக்கின்ற செயலகளாகும்.
ஆகவே நோன்பாளிகள் பகல் வேளையில் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க
வேணடும்.எனினும் நோன்பு நோற்பவர் மறந்து உண்பதாலோ, பருகுவதாலோ அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
இவற்றில் ஏதேனும் ஒன்றை வேண்டுமென்றே செய்து நோன்பை
முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து விடாது இரண்டு மாதங்கள்
நோன்பு நோற்க வேண்டும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க
வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றோர் முறித்த நோன்பை மீண்டும்
நோற்க வேண்டும். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூது)

3. சலுகையளிக்கப்பட்டவர்கள்
நோயாளிகள், கர்ப்பப் பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள். பிரயாணிகள்,
தள்ளாத வயதினர் (முதியோர்) ஆகீயோரில் முதியோரைத்தவிர ஏனையோருக்கு
நோன்பை பின்னர் நோற்பதற்கு அனுமதியுள்ளது.முதியோர் நோன்பை விட்டதற்கு
பரிகாரமாக ஒவ்வொரு நோன்புக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும்..
( பார்க்க:குர்ஆன் : 2:184,185. மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத்.நஸயீ)
4. தடைசெய்யப்பட்டவர்கள்.மாதவிடாய்,மற்றும் பிரசவத் தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் தூய்மையான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும் (புகாரி,முஸ்லிம், அஹ்மத்)

நோன்புக்குரிய நிய்யத்
நிய்யத் என்றால் மனதால் நினைப்பதாகும்.வாயால் மொழிவதல்ல. இன்று பெரும்பாலான முஸ்லிமகள் தவறாகவே புரிந்து கொண்டு ‘ நவைய்த்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளு ரமளானி ஹாதிஹிஸ்ஸனத்தி லில்லாஹித்தஆலா’ ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நளைப்பிடிக்க நான் நிய்யத்துச் செய்கிறேன் என்று வாயால் மொழிகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமுமில்லை. நபி(ஸல்) இவ்வாறு கற்றுத்தரவில்லை.
இந்த நியத்தை (மனதால்) வைத்துக்கொளவது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘எவர் ஃபஜ்ருக்கு முன்னர் நோன்புக்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை.

நோன்பு திறத்தலும் ஸஹர் உணவும்
எனது சமுதாயத்தினர் நோன்பு திறப்பதை அவசப்படுத்தி ஸஹர் செய்வதைப் பிற்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர். (புகாரி,முஸ்லிம்)
நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர் என அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்)கூறினார்கள் (திர்மிதி)

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ:-

ذَهَبَ الظَّمَأُ وَ ابْتَلَّتِ الْعُرُوقُ، وَ ثَبَتَ الأجْرُ إنْ شَاءَ اللَّهُ
தஹபள்ளமஊ வப்தல்லதில் உரூக்கு வஸபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.

பொருள்: தாகம் தணிந்ததுஇ நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது. (ஆதாரம்: அபூதாவூத்)

உணவளித்தவருக்காக விருந்தாளியின் துஆ
அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஜக்தஹும் வஃக் ஃபிர்லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத்துச் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவம் பொறுத்தருளவும் செய்வாயாக! அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக! (முஸ்லிம் : 3-1615)

குடும்பத்தாரிடம் (எவர் வீட்டிலாவது) நோன்பு திறந்தால் (நோன்பு திறப்பவராகிய) அவர் கூற வேண்டிய துஆ!

அஃப்தர இன்தகு முஸ்ஸாயிமூன், வ அகல தஆமகுமுல் அப்ரார், வஸல்லத் அலைகுமுல் மலாயிக்கத்து.

பொருள் : நோன்பாளர்கள் உங்களிடம் நோன்பு திறந்து விட்டனர்: நல்லவர்கள் உங்களுடைய உணவையும் உண்டு விட்டனர்: மலாயிகத்துகள் உங்கள் வகைக்கு பிரார்த்தனையும் செய்து விட்டனர். (அபூதாவுது, இப்னு மாஜா, நஸயீ).
1) நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரைக்கும் நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன்,பயணி இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ)

விளக்கம்: நோன்பாளி நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளை செய்து வரவேண்டும்.

இன்று முஸ்லிம்களில் பலர் நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள்.விதவிதமான உணவுப்பொருட்களை தயாரிப்பதிலும். முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள்.உணவின் கவனத்தில் துஆ செய்வதையும் மறந்து விடுகிறார்கள்.

நோன்பின் இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், எல்லா மஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும்.. நமது சகல தேவைகளையும் நிறைவேற்றித்தர அந்த வல்ல நாயனே போதுமானவன்.

1) ஸஹர் உணவு உண்ணுதல்
ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல. எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
இன்னும் சில அறிவிப்பில் என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான். மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்ததோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ‘வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்’ இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!

1) நான் நபி(ஸல்)அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி)அவர்கள் கூறினார்கள்.ஸுப்ஹுடைய பாங்குக்கும் ஸஹர் உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ்(ரலி)அவர்கள் கேட்டதற்கு “ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று” விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரைஇ பிற்படுத்துவது சுன்னத்தாகும். அதாவது ஸஹர் உணவுக்கும் சுப்ஹுடைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது சுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.

இறையச்சம்
இறையச்சம் என்பது இறைநம்பிக்கையாளர்களின் உயிர் நாடியாக இருக்கவேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்படவேண்டும்.
ஒரு இறைநம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல்,தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்கவேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகி இருக்கிறான்.

அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கிவிடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்கவேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செய்து கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் ஏனைய பதினொரு மாதங்களுக்கும் பொதுவானது தான். எனவே எல்லா நாட்களிலும் ஒருவரிடம் ரமளானில் பெற்ற அதே இறையச்சம் பிரதிபலிக்கவேண்டும்.

போலித்னம் கூடாது. 

ரமளானின் கடைபிடிக்கும் அதே கட்டுப்பாடுகளையும் உள்ளச்சத்தையும் ரமளானுக்குப்பிறகும் பெற்றால் தான் உண்மையிலேயே நோன்பு நோற்றவனாக இருக்க முடியும். இல்லையேல் அது போலித்தனமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் பொய் சொல்வதையும், பொய்யான செயலையும் விடவில்லையோ அவன் உண்ணாமல பருகாமல்இருப்பதால் இறைவனுக்கு எந்த பயனும் இல்லை.

ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்,-

நீ நோன்பு நோற்றால் உனது செவிப்புலன், உனது பார்வை,உனது நாவு யாவும் பொய்பேசுவது, (பாவமான) விலக்கப்பட்டவைகளைச்செய்வது போன்ற வற்றிலிருந்தும் நோன்பு நோற்கட்டும்.அண்டை அயலாருக்கு நோவினை செய்வதைவிட்டும் உன்னை காத்துக்கொள். கண்ணியத்தையும அமைதியையும் கடைபிடி! நீ நோன்பிருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒரேமாதிரி இருந்து விடக்கூடாது.

ஒரு கணம் சிந்திப்பீர்!

யார் நம்மிடம் சண்டைக்கு வந்தாலும் ‘நான் நோன்பாளி’ எனக்கூறி ஒதுங்கிக்கொள்கிறோம்.
டி.வி சீரயல்களிலும் திரைக்காட்சிகளிலும் சதாவும் பொழுதைக் கழிக்கும் நாம் பாங்கு சப்தம்கூட விழுந்தால் கூட கண்டு கொள்ளாமல் இருந்து விடுவோம். ரமளான் வந்ததும் அவைகளை ஒதுக்கிவிடுகிறோம்.

ரமளான் வந்ததும் பெரியவர் சிறியவர் எனப்பாராது போட்டியிட்டுக்கொண்டு ஜமாஅத் தொழுகைக்கு விரைகிறோம். வழமையாகத் தொழுவோருக்குக்கூட இடம் கிடைக்காது மக்கள் வழிந்தோடும். இரவில் தூக்கத்தைத் தியாகம் செய்து இரவுத்தொழுகைகளிலும், வணக்க வழிபாடுகளிலும்,முனைப்பாக ஈடுபடுவோம்.. ஏனெனில் ரமளானில் செய்யப்படும் ஒவ்வொரு அமலுக்கும் ஒன்று முதல் எழுநூறு வரை நன்மைகள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துள்ளோம்..

ரமளானில் எவ்வாறேனும் ஒரு குர்ஆனை ஓதி முடித்துவிடவேண்டும் என்ற வைராக்கிய உறுதியுடன் ஓதி முடித்துவிடுகிறோம்.

யாசகர் யார் நம்மிடம் வந்தாலும் தட்டாமல் தான தர்மங்கள் செய்கிறோம். வயிறார உணவு வழங்குகிறோம். ஏனெனில் யார் மன உறுதியுடன் நம்பிக்கை கொண்டு நற்கூலியை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி 37.)
குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் வீதம் வழங்கப்படும்.
ஒருவருக்கு இஃப்தார் நோன்பு திறக்க உணவு வழங்கினால் நோன்பு நோற்றவர் அளவுக்கு குறையாது நன்மைகள் கிடைக்கும் என்பவற்றையெல்லாம் தெரிந்து செயல்படுகின்ற நாம் ரமளான் முடிந்ததும் அவற்றையெல்லாம் காற்றிலே வீசிவிட்டு பழைய நிலைக்கு வந்து விடுகிறோம். புழையபடி டி.வி.சீரியல்கள்! தொழுகைக்கு டாட்டா! தர்மத்தை திரும்பியும் பார்ப்பதில்லை. ஏழைகளை ஏறிட்டும் பார்ப்பதில்லை.

நாம் ரமளானில் பக்குவப்பட்டிருக்கிறோமா? பண்பட்டிருக்கிறோமா? அடுத்த ஆண்டும் இதே போன்ற ரமளானின் பேறுகள் நமக்குக்கிடைக்குமா? என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாம் ரமளானின் முழுமையான நன்மைகள் யாவும் பெற்று ரமளானின் ஒழுக்க நெறிகளையும், மாண்புகளையும் வாழ்வு முழுவதும் கடைபிடிக்க வல்ல ரஹ்மான் அருள் பொழிவானாக! ஆமீன்

 

வீடியோவை பார்வையிட இங்கு சொடுக்கவும்.

வீடியோ கிளிப்-ஐ பதிவிறக்கம் செய்ய, மவுஸினால் இங்கு வலது சொடுக்கி, “save target as” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Real Player Video Clips. To Play without any trouble please Download Latest RealOne player